பதிவு செய்த நாள்
07
அக்
2023
03:10
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி நான்காவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால், பக்தர்கள் அவதிப்பட்டனர்.
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். இங்கு ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி சனிக்கிழமை விழா வெகு விமர்சையாக நடைபெறும். இன்று புரட்டாசி நான்காவது சனிக்கிழமை விழாவை முன்னிட்டு, அதிகாலை, 3:30 மணிக்கு கோவில் நடை திறந்து, மூலவர் அரங்கநாதருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, 4:00 மணிக்கு, பக்தர்கள் வழிபாட்டுக்கு கோவில் திறக்கப்பட்டது. பின்பு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, உற்சவமூர்த்தி அரங்கநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு வேத பாராயணம், உபநிஷ அஷ்டோத்திரம் சேவிக்கப்பட்டது. பின்பு தீபாராதனை காண்பித்து, தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, அரங்கநாத பெருமாளை வழிபட்டனர்.
தாசர் வழிபாடு: கோவில் முன்பு ஏராளமான தாசர்கள் அமர்ந்திருந்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்கள், தாங்கள் கொண்டு வந்த அரிசி, பருப்பு காய்கறிகளை தாசர்களுக்கு படைத்தனர். தாசர்கள் சங்கு ஊதி, சேகண்டி அடித்து பூஜை செய்து, பக்தர்களுக்கு அரிசி பருப்பு பொருட்களை வழங்கினர். வீடுகளில் பொங்கல் வைத்து, விரதத்தை முடிக்க, பக்தர்கள் தாசர்களிடம் இருந்து, சிறிதளவு உணவு பொருட்களை பெற்றுச் சென்றனர்.
வெய்யிலின் தாக்கம் பக்தர்கள் அவதி: கோவில் முன்புள்ள தார் சாலையில், நூற்றுக்கும் மேற்பட்ட தாசர்கள், வெய்யலில் அமர்ந்திருந்தனர். பக்தர்கள் தாசர்களுக்கு படையல் இடும்போது, வெய்யிலின் சூடு தாக்கத்தால், ரோட்டில் நிற்க முடியாமல் அவதிப்பட்டனர். அடுத்த வாரம், 14ம் தேதி புரட்டாசி மாத, 5 வாரம் என்பதால், பக்தர்கள் அதிகம் வர வாய்ப்புள்ளது. அதனால் வெய்யில் தாக்கத்திலிருந்து பக்தர்கள் சிரமம் இல்லாமல் இருக்க, கோவில் முன்பாகவும், சாலையிலும், சாமியான கட்ட, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.