பதிவு செய்த நாள்
16
அக்
2012
10:10
வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில், அமாவாசையை தொடர்ந்து, நவராத்திரி விழா துவங்கியது. மகாளய அமாவாசையை முன்னிட்டு, இங்குள்ள சுந்தரமகாலிங்க சுவாமி, சந்தனமகாலிங்க சுவாமி, சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு 18 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வில்வ அர்ச்சனை நடந்தது. பின், சுந்தரமகாலிங்க சுவாமிக்கு, வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு, நாகாபரணம் அணிவிக்கப்பட்டது. சந்தனமகாலிங்க சுவாமி சந்தனக்காப்பு மற்றும் சுந்தரமூர்த்தி சுவாமி ராஜஅலங்காரத்தில் அருள்பாலித்தனர். இதைத் தொடர்ந்து, நவராத்திரி விழா துவங்கியது. இம்மலையில் ஆனந்தவல்லி அம்மனுக்காக, இவ்விழா கொண்டாடப்படுகிறது. மற்ற நாட்களில் அம்மனை வழிபட, பீடம் மட்டுமே உண்டு. விழா நாட்களில் தான் அம்மன் உருவமாய் காட்சியளிப்பார். நேற்று, காப்புக்கட்டு வைபவம் நடந்தது. அம்மனுக்கு காப்பு வைத்து, பூஜைகள் செய்யப்பட்டன; விரதமிருக்கும் பக்தர்கள் காப்புக்கட்டினர். அமாவாசை, நவராத்திரி தொடக்க விழாவும் ஒருசேர வந்ததால், ஏராளமான பக்தர்கள் மலையில் திரண்டனர்.