திண்டுக்கல்: திருமலை நாயக்கர் கால கல்வெட்டுகள் திண்டுக்கல் மேட்டுக்கடையில் கண்டுபிடிக்கப்பட்டது. திண்டுக்கல் ஜி.டி.என்.கலைக்கல்லூரி முதன்மை செயல் அதிகாரி ரத்தினம், சிறப்பு அலுவலர் ஆறுமுகம் ஆலோசனைபடி, வரலாற்று துறை இணை பேராசிரியர் சங்கரலிங்கம் தொல்லியல் ஆய்வு நடத்தினார். இவரது ஆய்வில், சாணார்பட்டி அருகே மேட்டுக்கடையில் திருமலை நாயக்கர் காலத்து கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்வெட்டுகளில், போரில் இறந்த உறவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலங்கள், நீர்ப்பாசனத்திற்கான சிறப்பு ஏற்பாடுகள் குறித்த விபரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மற்றொரு கல்வெட்டில் கொத்தப்புளி பெருமாள் கோவிலில் அரசரின் பிரதிநிதிகளாக செயல்பட்ட மூன்று தலைமுறையினரின் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் 17-ம் நூற்றாண்டை சேர்ந்தவை. இவற்றின் மூலம் மதுரை நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் திண்டுக்கல் முக்கியத்துவம் பெற்றிருந்த விபரம் தெரியவந்துள்ளதாக சங்கரலிங்கம் தெரிவித்துள்ளார்.