பதிவு செய்த நாள்
09
அக்
2023
12:10
மைசூரு; மைசூரின் அம்பாவிலாஸ் அரண்மனையில் உள்ள ஆத்ம விலாஸ் விநாயகர் மிகவும் அபூர்வமானவர். இந்த விநாயகர் இருப்பதே பலருக்கும் தெரியாது. அரண்மனை நகரான மைசூரு, பல அபூர்வமான வரலாற்று சம்பவங்களுக்கு சாட்சியாக அமைந்துள்ளது. குறிப்பாக, அம்பாவிலாஸ் அரண்மனை பல சிறப்புகளை அடங்கியது. மைசூரின் பெருமையை அதிகரிக்கும் அம்பா விலாஸ் அரண்மனையில், அபூர்வமான விநாயகர் குடி கொண்டுள்ளார். எளிதில் யாருடைய கண்களுக்கும் தென்படமாட்டார். அரண்மனையில் உள்ள
ஆத்ம விலாஸ் விநாயகர் விக்ரஹம் சிவப்பு நிறத்தில், தீப்பிழம்பு போன்று ஜொலிக்கிறது. இவரை பார்ப்பது அதிர்ஷ்டம் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாகும். சந்தன அரண்மனை கட்டும் போதே, ஆத்ம விலாஸ் விநாயகரை பிரதிஷ்டை செய்ததாக, வரலாற்று வல்லுனர்கள் கூறியுள்ளனர். கோவிலுக்கு 200 ஆண்டுகள் வரலாறு உள்ளது. கடந்த 18ம் நூற்றாண்டில், ஏற்பட்ட தீ விபத்தில் சந்தன அரண்மனை எரிந்து கருகியது. ஆனால், ஆத்ம விலாஸ் விநாயகருக்கு மட்டும், எதுவும் ஆகவில்லை என வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. இந்த விநாயகரை பூஜித்த பின், எந்த பிரச்னைகளும் இன்றி, புதிய அரண்மனை கட்டப்பட்டது என, அரச குடும்பத்தினர் கூறுகின்றனர். யது வம்சத்தினருக்கு, சாமுண்டீஸ்வரி குலதெய்வம் என்றால், ஆத்ம விலாஸ் விநாயகர் பிரியமான கடவுளாகும். இவர் மீது அபார பக்தி வைத்துள்ளனர். சிறப்பு நாட்கள், பண்டிகை நாட்களில் இப்போதும் பூஜை நடக்கிறது. ஐந்து தலை முறைகளாக பூஜை , புனஸ்காரங்கள் நடக்கின்றன. இவற்றை பார்க்க பொது மக்களுக்கு வாய்ப்பில்லை. இன்றைக்கும் அரச குடும்பத்தினரை வழி நடத்துவது, ஆத்ம விலாஸ் விநாயகரின் சக்தி தான் என, நம்புகின்றனர்.