பதிவு செய்த நாள்
16
அக்
2012
11:10
திருச்சி: மகாளய அமாவாசையையொட்டி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய ஆயிரக்கணக்கோர் கூடினர்.முன்னோர்கள் இறந்த நாளான திதி மற்றும் மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில், புனித நதிகளின் கரைகளில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது, அவர்களின் ஆத்மாவை சாந்தியடையவும், வம்சாவழிகளை வளம் பெறச் செய்யும் என்பதும் ஐதீகம்.முன்னோர்களின் திதி நாளன்று தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள், ஆடி அமாவாசை, மகாளய அமாவாசையன்று தர்ப்பணம் செய்வது ஆண்டுதோறும் தர்ப்பணம் செய்த பலன்களை அளிக்கும்.மகாளய அமாவாசையான நேற்று, ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். காவிரி ஆற்றில் புனித நீராடி, தங்களது முன்னோருக்கு எள் சாதம், தர்ப்பை புல், தேங்காய், பூ, பழத்துடன் படையலிட்டு, காவிரி ஆற்றில் தர்ப்பணம் செய்தனர்.நூற்றுக்கணக்கான புரோகிதர்கள், பக்தர்கள் தர்ப்பணம் கொடுக்க உதவி செய்தனர். பக்தர்களின் வசதிக்காக, திருச்சி மாநகராட்சி சார்பில், அம்மா மண்டபம் சாலைப்பகுதியில், நடமாடும் கழிவறைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தது.நீராடும் பக்தர்கள் மூழ்காமல் தடுக்க, ஸ்ரீரங்கம் தீயணைப்புத்துறையினர் ஆற்றுக்குள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர். ஸ்ரீரங்கம் ஏ.சி., ஜெயச்சந்திரன் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.