பதிவு செய்த நாள்
17
அக்
2023
10:10
நவராத்திரி மூன்றாம் நாளில் அம்பிகையை வராஹியாக அலங்கரிக்க வேண்டும். பன்றிமுகத்துடன் கூடியவளாக விளங்கும் இவளை வழிபட்டால் பகைவர் பயம் நீங்கும். வராகியின் அருளால் விரும்பிய வரம் கிடைக்கும். மதுரை மீனாட்சியம்மன் இன்று ஏகபாத மூர்த்தியாக காட்சி தருகிறாள். இன்று அம்மனை வழிபட்டால் மனம், உடல்பலம் அதிகரிக்கும்.
மதுரை மீனாட்சியம்மன் இன்று ஏகபாத மூர்த்தியாக காட்சி தருகிறாள். சிவனின் அறுபத்து நான்கு வடிவங்களில் ஏகபாத மூர்த்தியும் ஒன்று. ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய ஐந்து மூர்த்திகள் ஒன்று சேர்ந்த கோலம் இதுவாகும்.
ஊழிக்காலத்தில் உலகம் நீரில் மூழ்கும் போது எல்லா உயிர்களும், உமையவளும் ஏகபாத மூர்த்தியிடம் ஒடுங்குவர். அப்போது இவர் மட்டும் அழியாமல் இருப்பார்.
நான்கு கைகள், மூன்று கண்கள், ஒற்றைக் கால் கொண்ட இவரின் வலதுபுறம் பிரம்மாவும், இடதுபுறம் மகாவிஷ்ணுவும் அஞ்சலி முத்திரையுடன் இருப்பர். இந்த பிரபஞ்சத்தை தாங்கி நிற்கும் துாணாக ஏகபாதரின் ஒற்றைக்கால் இருக்கும். வலதுகை அபய முத்திரையும், இடதுகை வரத முத்திரையும் காண்பிக்க, பின் இரு கைகளில் மான், மழு ஏந்தியிருப்பார். இவரை வழிபட்டால் மனம், உடல்பலம் அதிகரிக்கும்.
பாட வேண்டிய பாடல்
குறித்தேன் மனத்தில் நின்கோலம் எல்லாம் நின்குறிப்பறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர் வழி வண்டு கிண்டி
வெறித்தேன் அவிழ்கொன்றை வேணிப்பிரான் ஒருகூற்றை மெய்யில்
பறித்தே குடிபுகுதும் பஞ்சபாண பயிரவியே