பனிமலையில் பரமேஸ்வரன் அருளும் கேதார்நாத் செல்வதற்கு ரோப் கார் சேவை; ரூ.1026 கோடியில் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21அக் 2023 12:10
சென்னை : கேதார்நாத் கோவிலுக்கு செல்வதற்கு 1026 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரோப் கார் வசதியை ஏற்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துவங்கியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள ஹிந்துக்களின் புனித தலமான கேதார்நாத் கோவில் நாட்டில் உள்ள 12 ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது.
இந்த கோவிலுக்கு செல்ல 16 கி.மீ.க்கு பக்தர்கள் மலையேறி செல்ல வேண்டும். செங்குத்தான பனிமலை பாதை என்பதால் இதற்கு 8 மணிநேரம் வரை ஆகும். பக்தர்கள் நடந்து மட்டுமின்றி குதிரைகள் கோவேறு கழுதைகள் டோலி வாயிலாகவும் அங்கு செல்லலாம். ஹெலிகாப்டர் சேவையும் தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய முடியாத ஏக்கம் பலருக்கு உள்ளது. இவர்கள் ஏக்கத்தை தீர்க்கும் வகையில் கேதார்நாத்திற்கு ரோப் கார் சேவையை துவங்க மத்திய அரசு 2022ம்ஆண்டு முடிவெடுத்தது. சோன்பிரயாக் என்ற இடத்தில் இருந்து கேதார்நாத் வரை 13 கி.மீ.க்கு ரோப் கார் அமைக்க 985 கோடி ரூபாய் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டது. இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதன்படி தற்போது இத்திட்டத்தை செயல்படுத்த 1026 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிதியில் 11 ஆயிரத்து 500 அடி உயரத்தில் உலகின் மிக நீளமான ரோப் கார் சேவை வழங்கப்படவுள்ளது. முன்பு திட்டமிட்ட இடத்தை மாற்றி இமாலயபள்ளதாக்கில் உள்ள கெளரிகுண்ட் என்ற இடத்தில் இருந்து இந்த ரோப்கார் சேவை துவங்கவுள்ளது.
ஜங்லிசட்டி பீம்பாலி ராம்பாரா கினுபானி கோராபதாவ் வழியாக ரோப் கார் கேதார்நாத்திற்கு பயணிக்கவுள்ளது. இப்பணியை மேற்கொள்வதற்கான ஒப்பந்ததாரர் தேர்வை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துவங்கி உள்ளது. இதற்கான முறைப்படி அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டு உள்ளது. ஒரு நாளைக்கு 8 மணிநேரம் ரோப் கார் சேவை வழங்கப்படவுள்ளது. இதன் வாயிலாக 50 நிமிடங்களில் கேதார்நாத் சென்று சேரலாம். ஒரு மணிநேரத்திற்கு 2000 பயணிகளை கோவிலுக்கு அழைத்து சென்று திரும்ப அழைத்து வரப்படவுள்ளனர். டிசம்பர் 6 ம்தேதி ஒப்பந்ததாரர் தேர்வை முடித்த கையோடு அடிக்கல் நாட்டு விழாவை நடத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.