கொள்ளிடக்கரையில் வித்யாரம்பம்; சரஸ்வதி தேவி முன் அ எழுதி கல்வி ஆரம்பித்த குழந்தைகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24அக் 2023 10:10
மயிலாடுதுறை: சரஸ்வதி பூஜையை முன்னிட்டு கொள்ளிடக்கரையில் அமைந்துள்ள சரஸ்வதி விளாகத்தில் உள்ள வித்யாரண்யேஸ்வரர் கோயிலில் சரஸ்வதி தேவிக்கு வித்யார்த்தி ஹோமம் மற்றும் குழந்தைகளுக்கு கல்வி ஆரம்பிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் சரஸ்வதி விளாகம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீவித்யா நாயகி உடனாகிய ஸ்ரீ வித்யாரண்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சரஸ்வதிதேவி தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இத்தலத்தில் சரஸ்வதிதேவி சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து ஆயக்கலைகள் அறுபத்தி நான்கும் கிடைக்க வேண்டி தவம் இருந்து அருள் பெற்றதாக தல புராணம் தெரிவிக்கிறது. இதனால் இவ்வூர் சரஸ்வதி விளாகம் என்று அழைக்கப்படுவது இக்கோயில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சுவாமி, அம்பாள் மற்றும் சரஸ்வதி தேவியை வழிபட்டால் ஞானமும், சிறந்த கல்வியும் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சிறப்பு வித்யார்த்தி ஹோமம் நடத்தப்பட்டு சுவாமி, அம்பாள் மற்றும் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை நடத்தப்பட்டு, குழந்தைகள் கல்வியில் சிறக்க வித்யாரம்பம் செய்து வைக்கப்பட்டது. அப்போது குருக்கள்கள் வேத மந்திரம் ஓத ஓதுவார்கள் தேவாரம் இசைக்க குழந்தைகள் அரிசி மணிகளில் எழுத, அவர்களது நாவில் கோவில் அர்ச்சகர் தேன் கொண்டு தமிழின் முதல் எழுத்தான அ எழுதினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.