பதிவு செய்த நாள்
25
அக்
2023
03:10
திருநெல்வேலி; பாளையில் 12 அம்மன் கோயில்களில் தசரா விழா சப்பர பவனி துவங்கியது. இன்று நள்ளிரவு மகிஷாசூரசம்ஹாரம் நடக்கிறது.
பாளை பகுதி அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நவராத்திரி தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்படும். பாளை ஆயிரத்தம்மன் கோயிலில் கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தசரா விழா துவங்கியது. அங்கு தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தூத்துவாரி அம்மன், வடக்கு, தெற்கு முத்தாரம்மன், யாதவர் உச்சினிமாகாளியம்மன், கிழக்கு உச்சினிமாகாளியம்மன், வடக்கு உச்சினிமாகாளியம்மன், விஸ்வகர்ம உச்சினிமாகாளியம்மன், புதுப்பேட்டை உலகம்மன், புது உலகம்மன், வண்ணார்பேட்டை பேராத்துச்செல்வியம்மன் கோயில்களிலும் தசராவையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஆயிரத்தம்மன் கோயிலில் நேற்று காலை பால்குடம், சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. இதர அம்மன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் திரண்டு வந்து வழிபட்டனர். வண்ணார்பேட்டையில் பேராத்துச்செல்வியம்மன், முத்தாரம்மன் வீதியுலா நடந்தது. நேற்றிரவு 12 கோயில்களிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நிறைவு பெற்ற பின்பு சப்பர பவனி துவங்கியது.
12 சப்பரங்கள் அணிவகுப்பு: இன்று காலை 7 மணிக்கு ராமசாமி கோயில் திடல், மதியம் 3 மணிக்கு ராஜகோபாலசுவாமி கோயில் திடல், மாலை 6 மணிக்கு மார்க்கெட் திடலில் 12 அம்மன் சப்பரங்கள் அணிவகுப்பு நடக்கிறது. பிரசித்தி பெற்ற இந்த நிகழ்வைக் காண சுற்றுப்பகுதி மக்கள் திரண்டு வருவர். நேர்த்திக்கடன்களை செலுத்தி ஒரே இடத்தில் 12 அம்மன்களை தரிசிப்பர். நள்ளிரவு 12 மணிக்கு மேல் சமாதானபுரம் எரும கிடா மைதானத்தில் இதர அம்மன் சப்பரங்களின் அணிவகுப்புடன் ஆயிரத்தம்மன் மகிஷாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வு நடக்கிறது. விழாவையொட்டி பாளை பகுதியில் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.