அபிஷேகப் பிரியரான ஈஸ்வரனை ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி திருநாள் அன்று, ஒவ்வொரு நட்சத்திரத்துக்கு உரிய பொருட்களால் வழிபடுவது விசேஷம். அதேபோல், ஐப்பசி மாதத்தில் அன்னத்தால் ஈஸ்வரனை வழிபடுவது சிறப்பு. அன்னம் பரப்பிரம்ம சொரூபம் என்பார்கள். அதாவது, அன்னம் வேறு, ஆண்டவன் வேறு அல்ல. இதையே சோத்துக்குள்ளே இருக்கார் சொக்கநாதர் என்றும் சொல்வது உண்டு.
அன்னசூக்தத்தில் உள்ள மந்திரம் அன்னத்தின் தன்மையை எடுத்துச் சொல்கிறது. ‘ ஒருவன் என்னை (உணவு) நிறைய சாப்பிடத் தொடங்கினால் அவனை நான் சாப்பிட்டு விடுவேன், என்கிறது அந்த மந்திரம். கடவுளுக்குப் படைத்த பிரசாதம் ஆனாலும், அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக்கூடாது. அன்னத்தை கடவுளாக உணர்ந்து அளவாகச் சாப்பிட வேண்டும். உடல்நிலைக்கேற்ப ஒருவருடைய ஜீரணசக்தி மாறும். அவரவர் தன்மைக்கேற்ப சாப்பிடுவது அவசியம். இதைத் தான் ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று பெரியவர்கள் சொல்லி வைத்தனர். அளவாகச் சாப்பிட்டால் உடலில் வியாதிகள் அணுகாது. ஆரோக்கியம் நிலைத்திருக்கும்.‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழலாம். அன்னத்தை வீணாக்கக்கூடாது, அது தெய்வசொரூபம் என்பதை மக்களுக்கு உணர்த்தவே அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. சிவன் கோயில்களில் நடத்தப்படும் அன்னாபிஷேகத்தைக் காண்பவருக்கு சொர்க்கம் என்பது நம்பிக்கை.