சோறுகண்ட இடம் சொர்க்கம் இதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27அக் 2023 05:10
“சோறுகண்ட இடம் சொர்க்கம்” என ஒரு பழமொழி உண்டு. அதற்குப் பலர் பல விதமான அர்த்தங்களைக் கூறுவர். ஆனால் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?
சிவன் கோயில்களில் நடத்தப்படும் அன்னாபிஷேகத்தைக் காண்பவருக்கு சொர்க்கம் என்பதே சிறந்தது. ஒவ்வொரு அரிசியும் லிங்கம்போல இருப்பதால் அத்தனை கோடி லிங்கங்களைத் தரிசித்த புண்யமும் நமக்கு உண்டு. ஆக அவ்வளவு உயர்ந்தது அன்னாபிஷேகம். மாமன்னன் ராஜராஜ சோழன் தான் பெற்ற வெற்றியின் நிமித்தம் தஞ்சை பெரிய கோயிலைக் கட்டியபோது சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்ய ஆரம்பித்தான். மிகப்பெரிய லிங்கமான அதற்கு அன்னாபிஷேகம் செய்வது எளிதல்ல. இருந்தும் அதனைத் தன் கடமையாக ஏற்றுச் செய்தான். அடுத்து இவருடைய மகன் ராஜேந்திரனும், தன்னுடைய ஆட்சியில் பெரிய வெற்றி பெற்ற போது அதனைக் கொண்டாட, கங்கை கொண்ட சோழபுரத்தில் தஞ்சை போன்றே ஒரு பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டினான். தந்தையைப் போலவே, மகனும் லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்து வந்தான். காலங்கள் கடந்தன... அந்தப் பழக்கம் அறவே நின்று போனது.... இது சார்ந்த தகவல்கள், காஞ்சி மகாபெரியவர் சந்திரசேகரஸ்வாமிகளுக்குத் தெரிய வந்த போது, தானே முன்னின்று ஒரு கமிட்டியை அமைத்து, அன்னாபிஷேகத்தைத் தொடர ஏற்பாடு செய்தார்.... இந்தச் சிறந்த பணி இன்று வரை செவ்வனே தொடருகிறது.