பதிவு செய்த நாள்
28
அக்
2023
01:10
மதுரை ; சூரியன் பூமி நிலவு மூன்றும் நேர்கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இன்று, அக்.28ம் தேதி இரவு 11:31 மணிக்கு மங்கலான நிழல் வட்டத்தில் சந்திர கிரகணம் துவங்குகிறது. அக்.29ம் தேதி அதிகாலை 1:05 மணியில் இருந்து அதிகாலை 2:24 மணி வரை இருண்மையான நிழல் சந்திரன் மீது விழும். இந்த கிரகணத்தின்போது, நிலா முழுதாக மறையாது: மிகச் சிறிய அளவில் மறையும் பகுதி சந்திர கிரகணமே நிகழ்கிறது. இன்றைய கிரகணத்தை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும், வெறும் கண்களால் காண முடியும். சில பகுதிகளில் இந்த வானியல் நிகழ்வைக்காண, அறிவியல் மையங்கள் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிரகணம் நடக்கும் நேரத்தில் கோவில்களில் நடை சாத்தப்பட்டு, பரிகார பூஜைக்குப் பிறகு திறக்கப்படும். இந்தியாவில் அடுத்த சந்திர கிரகணம் 2025 செப்., 7ல்தான் தெரியும். அது முழு சந்திரகிரகணமாக இருக்கும்.
மதுரை மீனாட்சி; சந்திரகிரகணத்தையொட்டி இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில், உபகோயில்களில் மாலை 6:00 மணிக்கு நடைசாத்தப்படுகிறது. கோயிலில் வழக்கமாக நடக்கும் மத்திய கால தீர்த்தம், அபிஷேகம், சுவாமி புறப்பாடு அதிகாலை 1:44 மணிக்கு நடக்கும். நாளை அதிகாலை 5:00 மணி முதல் பக்தர்கள் வழக்கம் போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். நேற்று கோயிலில் சாந்தாபிேஷகம் நடந்த நிலையில், இன்று உச்சி காலத்தில் மூலவருக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது.
பழநி முருகன் : பழநி முருகன் கோயிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று(அக்.,28) இரவு 8:00 மணிக்கு அர்த்த ஜாம பூஜையுடன் நடை சாத்தப்படுகிறது. நாளை அதிகாலை 1:05 மணி முதல் 2:23 வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இன்று இரவு 8:00 மணிக்கு பழநி கோயிலில் அர்த்தஜாம பூஜை நடைபெறுகிறது. அதன் பின் கோயில் நடை சாத்தப்படுகிறது . சந்தர கிரகணம் முடிந்த பின் கோயிலின் அனைத்து பகுதிகளும் சுத்தம் செய்யப்படும். நாளை அதிகாலை 4:30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு கலச பூஜை, ஹோமம், அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெறும். அதன் பின் விஸ்வரூப தரிசனம், நித்திய பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சந்திர கிரகணம் ஞாயிறு (அக்.29) அதிகாலை 1:05 மணிக்கு துவங்கி 2:23 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் கர்ப்பிணிகள் சந்திரனை பார்க்க கூடாது. இன்று (அக்.28) 7:00 மணிக்கு முன்பாக உண்பது நல்லது. சனிக்கிழமை பிறந்தவர்கள், அசுவினி, பரணி, மகம், மூலம், ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஜாதகத்தில் சந்திர திசை, சந்திர புத்தி உள்ளவர்கள் கிரகணம் முடிந்த பின் கடலில் அல்லது கல் உப்பு சேர்த்த தண்ணீரில் குளிக்க வேண்டும். பரிகார ராசியினர் கட்டாயம் (அக்.29) காலையில் கோயிலுக்கு செல்ல வேண்டும். அதிகாலை 1:05 மணிக்கு கண் வழித்து காத்திருந்தால் வானில் நடக்கும் அதிசயத்தை காணலாம்.