பதிவு செய்த நாள்
29
அக்
2023
10:10
வாரணாசி: உத்தர பிரதேசத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில், பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
உ.பி.,யின் வாரணாசி மாவட்டத்தில், புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, உள்ளூர், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். எனினும், இக்கோவிலில் பக்தர்களுக்கு எந்தவித ஆடை கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. இந்நிலையில், காசி விஸ்வநாதர் கோவில் அறக்கட்டளை தலைவர் நாகேந்திர பாண்டே நேற்று கூறியதாவது: சமீப காலமாக கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு இருக்க வேண்டும் என, பக்தர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது. இது குறித்து, நவம்பரில் நடக்கவுள்ள கூட்டத்தில் விவாதிக்கப்படும். ஆண்கள் வேட்டி குர்தா; பெண்கள் புடவை அணிவது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படும். அதே சமயம், நாட்டின் மற்ற கோவில்களில் அமலில் உள்ள ஆடை கட்டுப்பாடு நடைமுறைகளும் கவனத்தில் கொள்ளப்படும். கோவிலுக்கு வரும் பக்தர்கள், நாகரிகமான உடை அணிந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என, நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.