பதிவு செய்த நாள்
30
அக்
2023
11:10
உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த, பட்டஞ்சேரி கிராமத்தில், சில மாதங்களுக்கு முன், விவசாய நிலம் ஒன்றில் புதைந்த நிலையில் இருந்த லிங்கம் கண்டெடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து, திரிபுரசுந்தரி அம்பிகை சமேத திருப்பட்டை நாகேஸ்வரர் லிங்கமாக அப்பகுதியினர் வழிபட்டு வருகின்றனர். புதிதாக கோவில் அமைத் து வழிபாடு செய்ய அப்பகுதிவாசிகள் தீர்மானித்தனர். அதன்படி, அப்பகுதியில் கோவில் அமைத்து, கடந்த செப்டம்பர் மாதம், நாகேஸ்வரர் லிங்கத்திற்கு பிரதிஷ்டை செய்தனர். தொடர்ந்து, 48நாட்களாக இக்கோவிலில், சுவாமிக்கு மண்டல அபிஷேகம் நடை பெற்றது. மண்டல அபிஷேக நிறைவு நாளான நேற்று, சங்காபிஷேகம் சிறப்பாக நடந்தது. முன்னதாக நேற்று காலை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடை பெற்றது. இதை அடுத்து, கோவில் வளாகத்தில் யாக வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டு, மந்திரங்கள் முழங்க 108 சங்காபிஷேகமும், மண்டல பூர்த்தியும் விமரிசையாக நடந்தது. மாலை 5:00 மணிக்கு, மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமியை பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.