பதிவு செய்த நாள்
30
அக்
2023
12:10
திருப்பத்துார்; திருப்பத்துார் அருகே, 16ம் நுாற்றாண்டை சேர்ந்த, வில் வீரன் நடுகல் கண்டெடுக்கப்பட்டது. திருப்பத்துார் மாவட்டம் பொம்மிக்குப்பம் பஞ்., வேடிவட்டத்தில், ஜவ்வாதுமலையில் இருந்து வரும் பாம்பாற்றின் கரையில், திருப்பத்துார் துாய நெஞ்ச கல்லுாரி, தனியார் கல்லுாரி வரலாற்று பேராசிரியர் பிரபு மற்றும் சமூக ஆர்வலர்கள் ராதாகிருஷ்ணன், நாராயணன், அன்பு செல்வம், உள்ளிட்டோர் இதை கண்டெடுத்தனர். இதுகுறித்து பேராசிரியர் பிரபு கூறியதாவது: நாயக்க மன்னர் காலத்தை சேர்ந்த, 16ம் நுாற்றாண்டை சேர்ந்த, வில் வீரன் நடுகல்லில், வீரனின் வலது கரத்தில் அம்பு, இடது கரத்தில் வில் ஏந்திய நிலை, தலையில் அலங்கரித்த நேரான கொண்டை, கழுத்தில் மூன்று அடுக்குகளை கொண்ட அணிகலன், முதுகில் அம்பு தாங்கிய கூடு, இடைக்கச்சையுடன் நீண்ட குறுவாள், காதுகளில் குண்டலம், கால்களில் வீரக்கழல் அணிந்து, கரும்பாறை கல்லால் நான்கரை அடி உயரம், மூன்றரை அடி அகலத்தில் சிலை உள்ளது. இந்த நடுகல்லை இப்பகுதி மக்கள் வேடியப்பன் என அழைத்து, வழிபட்டு வருகின்றனர். வரலாற்று சாட்சியாக நிற்கும் இந்த நடுகல், மக்கள் கூட்டத்தின் பிரதிநிதியாக போர்க்களத்தில் பங்கேற்று உயிர் துறந்த, ஒப்பற்ற வீரனின் நினைவை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.