மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயிலில் துலா உற்சவ கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30அக் 2023 03:10
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயிலில் துலா உற்சவத்தை முன்னிட்டு விநாயகர் கொடியேற்றம் நடந்தது.
மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் துலா உற்சவம் 30 நாட்களுக்கு சிறப்பாக கொண்டாடப்படும். இதில் ஐப்பசி மாத முதல்நாள் தீர்த்தவாரி, அமாவாசை தீர்த்தவாரி, கடைமுக தீர்த்தவாரி மிகவும் பிரசித்தி பெற்றது. கடைமுக தீர்த்தவாரிக்கு 10 தினங்களுக்கு முன்பு கொடியேற்றம் நடக்கும். அதற்கு முன்பு ஐப்பசி 13ம் தேதி விநாயகர் கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இவ்வாண்டு துலா உற்சவம் 18ம் தேதி முதல்நாள் தீர்த்தவாரியுடன் தொடங்கியது. நேற்று ஐப்பசி 13ம் தேதியையொட்டி விநாயகர் கொடியேற்றம் நடந்தது. அதனை முன்னிட்டு நேற்று அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி, விநாயகர், முருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது, தொடர்ந்து விநாயகர் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை விசாரணை வேளப்ப தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் சிவபுரம்வேதசிவாகம பாடசாலை நிறுவனர் சாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து விநாயகர் கொடியேற்றம் நடந்தது. இதில் கோயில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கணேசன் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.