பதிவு செய்த நாள்
31
அக்
2023
10:10
பல்லடம்; சித்தம்பலம் நவகிரக கோட்டையில் நடந்த ராகு கேது பெயர்ச்சி விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். பல்லடம் அடுத்த, சித்தம்பலம் நவகிரக கோட்டையில், ராகு கேது பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. நேற்று மாலை, 4 முதல் 5 மணிக்குள், ராகு பகவான், மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும்; கேது பகவான், துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைந்தனர். முன்னதாக, காலை 6 மணி முதல் விநாயகர், நவகிரகங்களுக்கு சிறப்பு வேள்வி வழிபாடுகள் துவங்கின. கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிறப்பு வேள்வி வழிபாடுகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து, ராகு கேது பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசிகளை சேர்ந்தவர்களுக்காக சிறப்பு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன. மாலை 4 மணிக்கு மேல் ராகு கேதுக்கள் சிம்மம் மற்றும் ஆடு வாகனத்தில் கோவிலை உலா வந்து, தீர்த்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பல்வேறு திரவியங்களால் ராகு கேதுக்களுக்கு அபிஷேக ஆராதனைகளும், இதையடுத்து, தீபாராதனையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ராகு கேதுக்கள் மற்றும் மூலவர் சிவபெருமான் அம்மையப்பராக பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.