பதிவு செய்த நாள்
02
நவ
2023
12:11
ஹாசன்: ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைதிறக்கப்படும், ஹாசனின் ஹாசனாம்பா கோவில் நடை இன்று திறக்கப்பட்டது. இதனால் நகரமே விழா கோலம் பூண்டுள்ளது.
ஹாசனில் உள்ள பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைதிறக்கப்படும். இந்தாண்டு, இன்று நண்பகல் 12:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. வரும் 15ம் தேதி வரை, 14 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும். முதல் மற்றும் கடைசி நாட்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. வரும் 14ம் தேதி காலை 4:00 மணி முதல், இரவு 7:00 மணி வரையிலும்; இரவு 11:00 மணி முதல், மறுநாள் காலை 7:00 மணி வரையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். மற்ற நாட்களில், தினமும் காலை 4:00 மணி முதல், மதியம் 1:30 மணி வரையிலும்; மதியம் 3:00 மணி முதல், நள்ளிரவு 2:00 மணி வரையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். ஹாசனாம்பா திருவிழாவை ஒட்டி, நகர் முழுதும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. எங்கு பார்த்தாலும் மா இலை, வாழை மரங்கள் கட்டப்பட்டு, விழா கோலம் பூண்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்தும், தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், 1,200 போலீசார் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். விழாவிற்கு 10 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.