பதிவு செய்த நாள்
02
நவ
2023
02:11
சென்னை, தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில், சென்னையில் உள்ள முருகன் கோவில்களுக்கு ஒரு நாள் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் செயலர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் உள்ள முருக பக்தர்களுக்கு உதவும் வகையில், இரண்டு பயணத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு, முன்பதிவு துவங்கி உள்ளது. முதலாவது திட்டத்தின்படி, சென்னை வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா வளாகத்தில் இருந்து, காலை 7:00 மணிக்கு சுற்றுலா பேருந்து, சென்னையின் தெற்கு பகுதியில் உள்ள கோவில்களுக்கு புறப்படும். அது, கந்தகோட்டம் முருகன் கோவில், தங்க சாலை ஏகாம்பரேஸ்வரர் கோவில், சிறுவாபுரி பாலமுருகன் கோவில், வடபழனி தண்டாயுதபாணி கோவில், தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகிய இடங்களுக்குச் சென்று, மாலை சுற்றுலா துறை அலுவலகத்தை வந்தடையும். இந்த திட்டத்திற்கு, 1,000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். இரண்டாவது திட்டத்தின்படி, சென்னை வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 7:00 மணிக்கு, சென்னையின் வடக்கு பகுதியில் உள்ள கோவில்களுக்கு பேருந்து புறப்படும்.
அது, வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவில், குன்றத்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில், திருப்போரூர் கந்தசுவாமி கோவில், திருவான்மியூர் அறுபடை வீடு கோவில் மற்றும் மருந்தீஸ்வரர் கோவில்களுக்கு சென்று, மாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும். இந்த திட்டத்திற்கு 1,200 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். முன்பதிவு குறித்த மேலும் விபரங்களை அறிய, தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஆலோசனை மையத்தை, 1800 4253 1111 என்ற கட்டணமில்லா எண்ணிலோ அல்லது, 044 - 2533 3333, 2533 3444 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம். அல்லது, www.ttdconline.com என்ற இணையதளத்தின் வாயிலாகவும் அறியலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.