பதிவு செய்த நாள்
02
நவ
2023
01:11
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், வரும் 13ம் தேதி துவங்கவுள்ள கந்தசஷ்டி விழாவிற்கு, அசுர பொம்மைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் விண்ணிலிருந்து போர்புரிந்த கோவிலாக கந்தசுவாமி கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில், மாசி பிரம்மோற்சவத்தின் போது, வள்ளி திருக்கல்யாண உற்சவமும், கந்தசஷ்டி விழா நிறைவில் தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெறுகின்றன.
இந்த ஆண்டு கந்தசஷ்டி வைபவம், வரும் 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தினசரி இரவு நேரங்களில், கந்தபெருமான் வள்ளி, தெய்வானையுடன் பல்லக்கு, கிளி, ஆட்டுக்கடா, புருஷாமிருகம், பூதம், வெள்ளி அன்னம், குதிரை, தங்கமயில், யானை போன்ற வாகனங்களில், வீதி உலா வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பிரதான சூரம்சம்ஹார விழா, வரும் 18ம் தேதி விமரிசையாக நடைபெறவுள்ளது. அன்றைய தினம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். ஆன்மீகசொற்பொழிவும் நடைபெறும். மற்ற கோவில்களில் சூரசம்ஹாரம் நடைபெறும் போது, ஒரே ஒரு உடல் அமைப்புடன் தலையை மட்டும் மாற்றி சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால், இக்கோவிலில் மட்டும், தனித்தனியே ஆறு தலைகளுடன், ஆறு உருவ பொம்மைகளுடன் சூரசம்ஹாரம் நடை பெறுவது சிறப்பு. அந்த வகையில், சிறப்பு மிக்க இவ்விழாவுக்காக, கெஜமுகன், சிங்கமுகன், பானுகோபன், அகிமுகி, தாடுகன், சூரபத்மன் ஆகிய ஆறு அசுரர்களின் முழு உருவ பொம்மைகள் தயாரிப்பு பணிகள், மும்முரமாக நடந்து வருகின்றன. காகிதகூழ், மூங்கில் போன்றவற்றால் அசுர பொம்மைகள் தயார் செய்யப்படுகின்றன. புதுச்சேரி அடுத்த கலிதீர்த்தால்குப்பத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் தலைமையிலான ஸ்பதி குழுவினர், அசுர பொம்மைகள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்பணிகள், இன்னும் சில தினங்களில் நிறைவடையும் என, அக்குழுவினர் கூறினர். இதேபோன்று, சிறுவர்கள் வீரபாகு வேடமணிந்து, அசுரர்களுடன் போரிட, காகித அட்டைவேல், வீரபாகு கலசங்கள் தயாரிக்கும் பணியும், முழுவீச்சில் நடந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன், அசுர பொம்மைகள் வெளியூரிலிருந்து இரும்பு சட்டத்தால் தயாரித்து எடுத்து வரப்பட்டன. எடை அதிகமாக இருந்ததால், அசுர பொம்மைகள் ஊர்வலம் வருதலில் அதிக சிரமம் காணப்பட்டது. இது குறித்து கோவில் நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அப்போது, கோவில் நிர்வாகத்தினர் எதிர்வரும் காலங்களில், கோவிலிலேயே அசுர பொம்மைகள் தயாரிக்கப்படும் என அறிவித்தனர். அதன் படி, சில ஆண்டுகளாக கோவில் வளாகத்திலேயே அசுர பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. விழாவை ஒட்டி, மற்ற ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. வரும் 19ம் தேதி, திருக்கல்யாண வைபவத்துடன் சஷ்டி விழா நிறைவடைகிறது. இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் குமரவேல் கூறுகையில், ‘‘கந்தசுஷ்டி விழா, 13ம் தேதி துவங்கி, 19ம் தேதி நிறைவடைகிறது. கோவில் சார்பாக, பக்தர்களுக்கு அனைத்து வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன,’’ என்றார்.