பதிவு செய்த நாள்
04
நவ
2023
06:11
விழுப்புரம்: செஞ்சி அடுத்த தளவானுார் கிராமத்தில், 1,400 ஆண்டுகள் பழமையான சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. திருவண்ணாமலையை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர்செல்வம், வெடால் விஜயன் ஆகியோர், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தளவானுார் கிராமத்தில், பஞ்ச பாண்டவர் மலையின் பின்புறம் உள்ள வயல்வெளியில் 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிற்பங்களை கண்டுபிடித்தனர்.
இது குறித்து ராஜ் பன்னீர் செல்வம் கூறியதாவது: 4 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் புடைப்பு சிற்பமாக உள்ளது, இது தவ்வை என கண்டறியப்பட்டுள்ளது. இது, 7ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது. சிறிது துாரம் தள்ளி வயலின் நடுவே கிடைத்த இரு பலகை சிற்பங்களை ஆய்வு செய்ததில், அவை கொற்றவை மற்றும் முருகன் சிற்பம் என்பது கண்டறியப்பட்டது. இவை 1,400 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.