பதிவு செய்த நாள்
06
நவ
2023
01:11
உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் ஊராட்சி, சீத்தாவரம் கிராமத்தில், நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலின் முன் பகுதி மண்டபம், பல ஆண்டுகளுக்கு முன் இடிந்து விழுந்து, தற்போது உற்சவர் உள்ள கட்டடம் மட்டுமே மிஞ்சி உள்ளது. அக்கட்டடமும் தற்போது சிதிலமடைந்து, கட்டடத்தின் தளத்தில், மரம், செடிகள் வளர்ந்து காணப்படுகின்றன.
இதுகுறித்து, அப்பகுதி வாசிகள் கூறியதாவது: கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் சிறப்பு வாய்ந்ததாக இக்கோவில் இருந்தது. பிறகு ஒரு மழைக்காலத்தில் இடிந்து விழுந்தது. மண்டபத்தின் கருங்கற்கள், நாளடைவில் காணாமல் போனது. நந்தி, பலிபீடம், தட்சணாமூர்த்தி சுவாமி மற்றும் அம்மன் சிலைகள் தற்போது மீதமுள்ளன. பழமையான இந்த சிவன் கோவில், முழுதுமாக அழிவதற்குள், அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு, கோவிலை சீரமைத்திட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.