பதிவு செய்த நாள்
06
நவ
2023
12:11
பெலகாவில்: பெலகாவியில் துரனுார் கிராமத்தில் கடந்த 45 நாட்களில், 30 பேர் உயிரிழந்துள்ளதால், அம்மனின் கோபத்தை போக்க, வரும் 15ம்தேதி திருவிழா நடத்த முடிவு செய்துள்ளனர். பெலகாவி மாவட்டம் , ராம் துர்கின் துரனுார் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் துர்கா தேவி கோவில் உள்ளது. இக்கோவிலின் அர்ச்சகர்கள், அம்மன் சிலையில் அபிஷேகம் செய்யும் போது சேத மடைந்தது. அதைதொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில், கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் 10
வயது முதல் முதியவர்கள் வரை என 45 நாட்களில், 30 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மனின் கோபத்தால் தான் இதுபோன்று நடக்கிறது என, கிராமத்தினர் நினைத்தனர். இதனால், கிராமத்தில் உள்ள வீரபத்ரேஸ்வரா கோவில் அர்ச்சகரின் ஆலோசனைப்படி, அம்மன் சன்னிதியை கடந்த 15 நாட்களாக மூடியுள்ளனர். ஹோமம், பூஜை , அபிஷேகம் செய்து, அம்மனை சமாதானப்படுத்த கிராமமக்கள் முடிவு செய்தனர். இதனால் வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில், அம்மன் வழிபாடு நடத்தப்படுகிறது. அன்றைய தினம், வீட்டில் எந்த பணியும் செய்யாமல், அம்மனை துதித்து வருகின்றனர். வரும் 15ம் தேதி தேவி திருவிழா நடத்த கிராமமக்கள் முடிவு செய்துள்ளனர். பின், ஹோமம், கும்பமேளா, அம்மனுக்கு ஆடு காணிக்கையாக செலுத்த முடிவு செய்துள்ளனர். கிராமத்தில் தொடர் மரணங்கள் நடப்பது குறித்து, மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் மகேஷ்கோனியிடம் கேட்டபோது, ‘‘கடந்த ஒன்றரை மாதங்களில் இக்கிராமத்தில், 30 மரணங்கள் நிகழ்ந்தை, ஊடகத்தின் வாயிலாக தெரிந்து கொண்டேன். ‘‘உடனடியாக ராமதுர்கா தாலுகா சுகாதார அதிகாரிகளிடம் தகவல் பெற்றேன். கிராமத்தில் விழிப்புணர்வு, ஆய்வு நடத்தப்படும். நானும் கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்வேன். மக்கள் தைரியமாக இருக்க வேண்டும். கவலைப்பட வேண்டாம்,’’ என்றார்.