‘இறை நினைவில் ஒருவனது உதடு அசையும் போதும் நான் அவனுடன் இருக்கிறேன்’ என இறைவன் சொல்வதாக நபிகள் நாயகம் கூறுகிறார். ‘அவனுடன் இருக்கின்றேன்’ என்பதற்கு அந்த அடியானைத் தன் பாதுகாப்பில், கண்காணிப்பில் அவன் வைக்கிறான் என்று பொருள். இறை நினைவுடன் இருப்பவனே உயிருள்ள மனிதனுக்கு ஒப்பாவான். அவனை மறந்தவன், பிணத்திற்கு ஒப்பாவான். இந்த நினைவு உள்ளத்திற்கு உயிரூட்டுகிறது. இது குறித்து அலட்சியமாய் இருப்பது ஒருவனது உள்ளத்தை மரணிக்கச் செய்யும். இந்த மனித உடலின் வாழ்க்கை உணவைக் கொண்டே அமைந்துள்ளது. உணவு கிடைக்காவிட்டால் உடல் அழியும். அது போல ‘இறை தியானம்’ என்னும் உணவு கிடைக்காமல் போனால் உயிருக்கும் மரணமேற்பட்டு விடும்.