பதிவு செய்த நாள்
08
நவ
2023
01:11
மங்களூரு: பெல்தங்கடி அருகே, 700 ஆண்டு பழமையான, கிருஷ்ணர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. பெங்களூரை சேர்ந்தவர் லட்சுமண், 55. இவருக்கு சொந்தமான நிலம் தட்சிண கன்னடாவின் பெல்தங்கடி தெக்கார் கிராமத்தில் உள்ளது. கடந்த சில நாட்களாக, நிலத்திற்கு அடியில், சாமி சிலை இருப்பது போன்று, லட்சுமணுக்கு அடிக்கடி கனவு வந்துள்ளது. இதனால் அவர் நேற்று தெக்கார் கிராமத்திற்கு சென்றார். கனவில் வந்த இடத்தில், ஜே .சி.பி., இயந்திரம் மூலம், லட்சுமண் குழி தோண்டினார். அப்போது நிலத்தில் புதையுண்டு இருந்த கிருஷ்ணர் சிலை எடுக்கப்பட்டது. இதனால் லட்சுமண் பரவசம் அடைந்தார். கிராமக்களிடம் தனக்கு வந்த கனவு பற்றி கூறினார். இதையடுத்து கிருஷ்ணர் சிலைக்கு, கிராம மக்கள் வழிபாடு நடத்தினர். இந்த சிலை 700 ஆண்டுகள் பழமையானது என்பதும், சிலை கண்டெடுக்கப்பட்ட இடத்தில் கோவில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த இடத்தில் மீண்டும் கோவில் கட்ட, கிராமக்கள் தயாராகி வருகின்றனர்.