திருச்செந்தூரில் ரூ.100 ஆக இருந்த தரிசன கட்டணம் ரூ.1000மாக உயர்வு; பக்தர்கள் அதிர்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13நவ 2023 11:11
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று காலையில் யாகசாலை பூஜையுடன் துவங்கியது. கந்த சஷ்டி விழா முன்னிட்டு தரிசன கட்டணம் உயர்த்தியதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று காலையில் துவங்கியது. காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் திருவிழா துவங்கியது. காலை 9 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானை அபிஷேக அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 18ம் தேதி மாலையில் கடற்கரையில் நடக்கிறது. திருவிழா நாட்களில் தங்கி விரதம் இருக்கும் பக்தர்களுக்காக கோயில் வளாகத்தில் 21 இடங்களில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று மாலையில் இருந்தே பக்தர்கள் திருச்செந்தூரில் குழும துவங்கிவிட்டனர். பாதுகாப்பிற்காக 2500 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பணியமர்த்தப்படுகின்றனர். இந்நிலையில் கந்த சஷ்டி விழா முன்னிட்டு ரூ.100 ஆக இருந்த விஸ்வரூப தரிசன கட்டணம் ரூ.2,000. சாதாரண நாளில் ரூ.500 ஆகவும், விஷேச நாளில் ரூ.2,000 ஆகவும் இருந்த அபிஷேக தரிசன கட்டணம் ரூ.3,000. விரைவு தரிசன கட்டணம் ரூ.100 ஆக இருந்தது ரூ.1000 ஆக உயர்வு, 2022ல் நிர்ணயித்த சிறப்பு தரிசன கட்டணத்தை திடீரென இன்று உயர்த்தியதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.