பதிவு செய்த நாள்
13
நவ
2023
11:11
காசர்கோடு: கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள அனந்த பத்மநாப சுவாமி கோவில் ஏரியில் வாழ்ந்து வந்த, 70 வயதான முதலை கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில், புதிதாக மற்றொரு முதலை அங்கு இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. வடக்கு கேரளாவின் காசர் கோடு மாவட்டத்தின் அனந்தபுராவில் மகாவிஷ்ணு கோவில் உள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள அனந்தபத்மநாபசுவாமி கோவிலின் மூலஸ்தானமாக இந்த கோவில் கருதப்படுகிறது. இந்த கோவிலை ஒட்டியுள்ள ஏரியில், 70 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த பாபியா என்ற முதலை, 2022 அக்., 9ல் உயிரிழந்தது. ஏராளமான அரசியல் கட்சி த லைவர்கள் , பொதுமக்கள் திரளாக வந்து, அந்த முதலைக்கு அஞ்சலி செலுத்தினர். ஒவ்வொரு காலகட்டத்திலும், இந்த ஏரியில் ஒரே ஒரு முதலை த னியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. பாபியா இறந்த பின் வேறு முதலை தென்படாத நிலையில், ஏரியின் அருகே உள்ள குகை யில் முதலை ஒன்றை பார்த்ததாக பக்தர் ஒருவர், கடந்த 8ம் தேதி தெரிவித்தார். அதை கோவில் நிர்வாகத்தினர் நேற்று முன்தினம் உறுதி செய்தனர். இது தொடர்பாக கோவிலின் தந்திரி எனப்படும் தலைமை பூசாரியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட நகர்வு குறித்து அவர் முடிவு செய்வார் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இந்த கோவில் ஏரியில் காணப்படும் நான்காவது முதலை இது என, பக்தர்கள் தெரிவித்தனர். இந்த முதலைகள் பக்தர்களுக்கு தீங்கு விளை விப்பதில்லை. அவை அசைவம் உண்ணாமல் கோவில் பிரசாதத்தை மட்டுமே உண்டு உயிர்வாழ்ந்து வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.