பதிவு செய்த நாள்
14
நவ
2023
03:11
பாலக்காடு: விஸ்வநாதர் கோவிலில் தேர் திருவிழா உற்சாகத்துடன் துவங்கியது.
கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ளது பிரசித்தி பெற்ற கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில். இங்கு ஐப்பசி மாதம் தேர் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு தேர் திருவிழா செப்., 8ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. இந்த நிலையில் திருவிழாவையொட்டி திருத்தேரோட்டம் இன்று துவங்கியது. காலை 7.00 மணியளவில், உபனிஷத் பாராயணம், வேத பாராயணம், 8.30 மணியளவில் விசாலட்சி சமேத விஸ்வநாதர் சுவாமி திருக்கல்யாண உற்சவம், 11.00 மணியளவில் ரதாரோகணம் நடந்தன. விசாலாட்சி சமேத விஸ்வநாதர் சுவாமி, மூலவர் கணபதி சுப்பிரமணியர் தேரில் எழுந்தருள, கைலாசபதை, ஹர ஹர சங்கர, சிவ சிவ சங்கர என கோஷம் எழுப்பி பக்தர்கள் வடம் பிடித்து தேரோட்டம் துவங்கியது. வேணாட்டு மற்றம் கோபாலன்குட்டி என்ற யானை உதவியோடு பக்தர்கள் வடம் இழுக்க கல்பாத்தியின் நான்கு வீதிகளிலும் திருத்தேர்கள் பவனி வந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றன. இரண்டாவது நாளான நாளை, மந்தக்கரை மகா கணபதி கோவில் திருத்தேர், திரு வீதிகளில் வலம் வருகிறது. நாளை மறுதினம் பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள் கோவில் தேரோட்டம், சாத்தபுரம் பிரசன்ன மகாகணபதி கோவில் தேரோட்டம் நடக்கின்றன. மாலை ஆறு மணி அளவில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் அருகே ஆறு திருதேர்களின் சங்கமம் நடக்கிறது. விழாவையொட்டி கல்பாத்தியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.