காடு மலை கடந்து வந்தோம் ஐயப்பா.. சபரிமலையில் குவிந்த பக்தர்கள்.. நெய்யபிஷேகம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2023 12:11
சபரிமலை, மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று அதிகாலை 3:00 மணிக்கு நடைதிறந்து நெய்யபிஷேகத்துடன் மண்டல காலம் தொடங்கியது.
சபரிமலையில் நேற்று மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது.மேல்சாந்தி (பொறுப்பு) நாராயணன் போற்றி நடை திறந்து தீபம் ஏற்றி 18 படிகள் வழியாக சென்று ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்த்தார். தொடர்ந்து 18 படிகளின் கீழ் நின்ற புதிய மேல் சாந்திகள் சபரிமலை - பி.என். மகேஷ், மாளிகைபுறம்- பி.ஜி.முரளி ஆகியோரை கைபிடித்து சன்னதிக்கு அழைத்து வந்தார். அவர்களுக்கு திருநீறு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு மேல் சாந்தி மகேஷுக்கு அபிஷேகம் நடத்தி ஐயப்ப மூல மந்திரத்தை காதில் சொல்லிக் கொடுத்து மூலஸ்தானத்திற்குள் அழைத்து சென்றார். மாளிகைப்புறம் கோயில் முன்பு நடைபெற்ற சடங்கில் மேல் சாந்தி முரளிக்கு அபிஷேகம் செய்து மூலஸ்தானத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் நடத்தினர். வேறு விசேஷ பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு நெய் அபிஷேகத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. தினமும் காலையில் உஷபூஜை , மதியம் களபாபிசேகம், கலசாபிஷேகம் உச்ச பூஜை, மாலையில் தீபாராதனை தொடர்ந்து இரவு 9:00மணிக்கு அத்தாழ பூஜை முடிந்து 11:00 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.