பதிவு செய்த நாள்
17
நவ
2023
11:11
நாகப்பட்டினம்; நாகை அடுத்த சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில்,கந்தசஷ்டி விழாவினை முன்னிட்டு,திருச்செந்துாரில் சூரனை சம்ஹாரம் செய்வதற்காக, சிங்காரவேலவர் அன்னை வேல் நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கும் போது, முருகப்பெருமானின் மேனியெங்கும் வியர்க்கும் மகிமை நடந்தது.
நாகை அடுத்த சிக்கலில்,அறுபடை வீடுகளுக்கு இணையான சிங்காரவேலவர் கோவில் உள்ளது. முருகப்பெருமானின் அவதார நோக்கமான, சூரசம்ஹாரத்திற்கு இக்கோவிலில் தான் முருகப்பெருமான் அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கி, திருச்செந்துாரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்தபுராணம் கூறுகிறது. கோச்செங்கட் சோழனால் கி.பி.,4 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு சமயக்குரவர்களால் பாடல் பெற்ற இக்கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 12 ம் தேதி துவங்கியது. நாள்தோறும்ஆட்டு கிடா, தங்கமயில், ரிஷபம் போன்ற பல்வேறு வாகனங்களில் முருகப்பெருமான் தேவியர்களுடன் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கந்த சஷ்டியின் 5 ம் நாள் விழாவான இன்று சிங்காரவேலர் தேவியருடன் அதிகாலை திருத்தேரில் எழுந்தருளி வீதியுலா வந்தார். திருச்செந்தூரில் நாளை சூரனை சம்ஹாரம் செய்வதற்காக, இன்றிரவு அன்னை வேல் நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சிக்காக திருத்தேரில் வீதியுலா வந்த முருகப்பெருமான் கோவிலுக்குள் வந்து அன்னையிடம் சக்திவேல் வாங்கும்போது ஆக்ரோஷத்துடன் காணப்பட்டார். அன்னையிடம் சக்திவேலை பெற்று தனது சன்னதியில் அமர்ந்த முருகப் பெருமானுக்கு, மானிடருக்கு வியர்ப்பது போல் திருமேனியெங்கும் வியர்வை பொழியும் மகிமை நடந்தது. முருகப்பெருமானின் ஆக்ரோஷ வெப்பத்தை தாங்கிக் கொள்ள இயலாமல், சன்னதியின் சுவர்களிலும் வேர்வைத் துளிகள் அரும்பியிருந்த காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.