பதிவு செய்த நாள்
21
நவ
2023
11:11
தஞ்சாவூர் : உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலின் சிற்பங்களை காண தினமும் ஆயிரக்கணக்கனோர் வந்து செல்கின்றனர்.
பெருமை மிக்க இந்த பெரிய கோவிலை பற்றி, மக்கள் மத்தியில் பல வகையான நம்பிக்கைகளும், கட்டுக்கதைகளும் உலவுகின்றன. குறிப்பாக, பெரிய கோவில் விமான கோபுரத்தின் நிழல் தரையில் விழாது. அந்த அளவுக்கு அற்புதமாக கட்டியுள்ளனர் என்று பலரும் நம்புகின்றனர். ஆனால், கோபுரத்தின் நிழல் தரையில் விழும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது, தமிழக அரசு பாடநுால் கழகத்தில் அச்சிடப்பட்டுள்ள, மூன்றாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் என்ற தலைப்பில், 80வது பக்கத்தில், இருவர் உரையாடல் போன்ற பாடம் உள்ளது. அதில், பெரிய கோவில் நிழல் தரையில் விழாது என்ற தகவல் இடம் பெற்றுள்ளது. இந்த தகவல் தவறானது என்பதால், கேள்விகளை தவிர்க்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
பெரிய நந்தி வளர்கிறதா?; வரலாறு மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் மணிமாறன் கூறியதாவது: கோவில் கோபுரத்தின் நிழல் கீழே விழாது என்ற தகவல், கோவில் கட்டுமானத்தின் பிரமாண்டத்தை கூறுவதற்காக சொல்லப்பட்ட ஒரு தவறான தகவல். இதை பலரும் உண்மை என்று நம்புகின்றனர். காலை நேரத்தில் கோபுரத்திற்கு பின்பக்கமும், மாலை நேரத்தில் கோபுரத்தின் முன்பக்கமும் கோபுரத்தின் நிழல் தரையில் விழும். அதுபோல, கோவிலில் உள்ள பெரிய நந்தி வளர்கிறது, விமானத்தின் கோபுரம், 80 டன் எடை உடைய ஒரே கல்லால் ஆனது என்றெல்லாம் பல தவறான தகவல்கள் பரவுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.