பதிவு செய்த நாள்
21
நவ
2023
11:11
புதுடில்லி: டில்லியில் நடந்த சத்பூஜைகளில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்று பிரார்த்தனை செய்தார். புதுடில்லி, உத்தர பிரதேசம், பீஹார், ஹரியானா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆண்டுக்கு இரு முறை சத்பூஜை கொண்டாடப்படுகிறது. சத் பூஜை நாட்களில், நதி, ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளின் கரைகளில் கூடும் மக்கள் சூரிய பகவானுக்கு மங்கலப் பொருட்களைப் படைத்து சிறப்பு பூஜை செய்து அவற்றை நீரில் விடுகின்றனர். கார்த்திகை மாத சத் பூஜை கடந்த 17ம் தேதி துவங்கி நேற்று நிறைவு பெற்றது. சத் பூஜையை முன்னிட்டு டில்லி அரசு மற்றும் மாநகராட்சி யமுனை நதிக்கரையில் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தன. டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தன் தொகுதியில் உள்ள லட்சுமிபாய் நகர், கிழக்கு கித்வாய் நகர் மற்றும் காளிபாரி ஆகிய இடங்களில் நடந்த சத் பூஜைகளில் பங்கேற்று பிரார்த்தனை செய்தார். இதுகுறித்து, சமூக வலை தளத்தில் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘அனைவருக்கும் உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்காக சத்திமையாவை பிரார்த்தனை செய்தேன். ஜெய் சத்திமையா,’’ என, கூறியுள்ளார்.