பதிவு செய்த நாள்
21
நவ
2023
12:11
காசர்கோடு; அய்யப்ப பக்தர்களுடன் பாதயாத்திரை சென்ற நாய், 600 கி.மீ., பயணம் செய்து கேரள மாநிலம் காசர்கோடு நகரை அடைந்தது. அதைப் பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். கார்த்திகை மாதம் பிறந்ததைத் தொடர்ந்து அய்யப்ப பக்தர்கள் கூட்டம், கூட்டமாக சபரிமலைக்குச் செல்கின்றனர். கர்நாடக மாநிலத்தில் பெலகாவி, கோகாக்கின், பெக்கேரி கிராமத்தைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள், கடந்த 4ம் தேதி சபரிமலைக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர். இவர்களை பெண் நாய் ஒன்றும் பின் தொடர்ந்தது. மங்களூரு வழியாக சென்ற அய்யப்ப பக்தர்கள், 600 கி.மீ., துாரம் பாதயாத்திரையாகச் சென்று காசர்கோடு நகரை அடைந்தனர். தங்களை பெண்நாய் பின் தொடர்ந்து வருவதை கவனித்த பக்தர்கள், சிறிது துாரம் வரலாம். அதன்பின் திரும்பிச் சென்று விடும் என, நினைத்தனர். குருசாமியும் கூட, நாயை விரட்ட முயற்சித்தார். ஆனால் அங்கிருந்து செல்ல வில்லை. அவர்களுடன் அதுவும் 600 கி.மீ., நடந்தே வந்தது. ஏற்கனவே 14நாட்கள் பாதயாத்திரை முடித்த, அய்யப்ப பக்தர்கள் மேலும் 500 கி.மீ., பாதயாத்திரை செல்ல வேண்டும். டிசம்பர் 4 அல்லது 5ல், சபரிமலையை அடையும் வாய்ப்புள்ளது. பக்தர்களுடன் பாதயாத்திரை சென்ற நாய், சைவ உணவை மட்டுமே சாப்பிட்டது.