பதிவு செய்த நாள்
21
நவ
2023
12:11
திருப்பூர்: சபரிமலை சீசனில், அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவக்கியுள்ளனர்; அவர்களுக்காக, அய்யப்பன் படம் பிரின்ட் செய்த ‘டி – சர்ட்’ விற்பனை, திருப்பூரில் களை கட்டியுள்ளது. விரதம் இருக்கும் அய்யப்ப பக்தர்கள், கருப்புநிற வேட்டி, சட்டை மற்றும் துண்டு மட்டும் அணிவது வழக்கம். கருப்பு நிற சட்டைகளை காட்டிலும், தற்போதைய ‘டிரெ ண்டிங்’ காக, கருப்பு டி – சர்ட் அணிவதை பக்தர்கள் அதிகம் விரும்புகின்றனர். அதற்காக, தமிழகம், கர்நாடகா மற்றும் கேரள மாநிலத்தில், இவ்வகை, டி – சர்ட் விற்பனை சூடுபிடித்துள்ளது. தீபாவளி முடிந்தவுடன், திருப்பூரில் உற்பத்தியான கறுப்பு டி– சர்ட்டுகளை, வியாபாரிகள் மொத்தமாக கொள் முதல் செய்வது அதிகரித்துள்ளது. அய்யப்ப சுவாமி படம், புலி வாகனத்தில் வரும் அய்யப்ப சுவாமி போன்ற படங்கள் பிரின்ட் செய்யப்பட்ட, டி – சர்ட்களுக்கு, பக்தர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகம் முழுதும்,‘சுவாமியே சரணம் ஐயப்பா ’ என்று வாசகமும், அய்யப்ப சுவாமி படமும் அச்சிட்ட, டி –சர்ட அதிகம் விற்பனையாகிறது. மற்ற மாநிலங்களில், அய்யப்ப சுவாமி படம் மட்டும் அச்சிட்ட டி– சர்ட்கள் , சில்லரை விற்பனைக்காக, திருப்பூரில் கொள் முதல் செய்வதும் அதிகரித்துள்ளது. திருப்பூரை சேர்ந்த பனியன் வியாபாரி அன்வர் என்பவர் கூறியதாவது: ஒவ்வொரு சீசனை பொறுத்து, ‘டி–சர்ட்’ மற்றும் பனியன் ஆடைகள் விற்பனை அதிகரிக்கும். சபரிமலை சீசன் துவங்கியதும், தமிழகம் மட்டுமல்லாது, கேரளா , கர்நாடகாவில், கருப்பு நிற ‘டி–சர்ட்’ விற்பனை சூடுபிடித்துள்ளது. சாதாரணமாக, 100 ரூபாய் முதல், அய்யப்ப சுவாமி படம் அச்சிட்ட ‘ டி–சர்ட்’ வழங்கி வருகிறோம். குறிப்பாக, இருளில் ஒளிரும் தன்மையுள்ள, ‘ரிப்ளக்டர் இங்க்’கில் சுவாமி படம் அச்சிட்ட ‘ டி–சர்ட்’களை இளம் பக்தர்கள் அதிகம் வாங்கி செல்கின்றனர். கார்த்திகை , மார்கழி மாதம் முடிய, சபரிமலை சீசன் வியாபாரம் கைகொடுக்கும். இதுபோன்ற ‘டி–சர்ட்’ உற்பத்தி பல நிறுவனங்களில், தீவிரமாக நடை பெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.