திருவாவடுதுறை ஆதீனத்தில் 23வது குருமதா சன்னிதானம் குருபூஜை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21நவ 2023 04:11
மயிலாடுதுறை; திருவாவடுதுறை ஆதீனத்தில் 23வது குருமதா சன்னிதானம் குருபூஜை விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா, திருவாவடுதுறையில் பழமை வாய்ந்த சைவத் திருமடங்களில் ஒன்றான திருவாவடுதுறை ஆதீன திருமடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்து குருபீடத்தில் 23வது குருமகா சன்னிதானமாக திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் தோன்றிய ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் 1983 முதல் 2012 வரை ஞானபீடத்தில் எழுந்தருளி அருளாட்சி செய்து வந்தார். இவர் காலத்தில் பல்வேறு கோவில் கும்பாபிஷேகங்கள் செய்து வைக்கப்பட்டதுடன், சைவ சமய வளர்ச்சிக்கு பல்வேறு அரும்பணிகளும் செய்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு இவர் சிவ பரிபூரணம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து ஆண்டு தோறும் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகளின் குருபூஜை கார்த்திகை சதய திருநாளில் நடைபெறும். இவ்வாண்டு ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் பரிபூரணமடைந்த கார்த்திகை சதய நாளான இன்று குருபூஜை விழா நடைபெற்றது. குருபூஜையை முன்னிட்டு திருவாவடுதுறை மறைஞான தேசிகர் தபோவனத்தில் அமைந்துள்ள சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகளின் குருமூர்த்தத்தில் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீன 24 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனையை செய்து வைத்தார். இதில் ஆதின கட்டளை தம்பிரான்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீன குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் முதல் திருமுறை( மூலம்) மற்றும் குங்கிலியக்கலய நாயனார் என்னும் இரு விழா மலர்களை வெளியிட்டார். தொடர்ந்து ஆதின திருமடத்தில் மாகேசுவர பூஜை நடைபெற்றது.