பதிவு செய்த நாள்
23
நவ
2023
02:11
கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு தேசிய கொடி கம்பம் அருகில் உள்ள பகவதியம்மாள்புரத்தில் வெற்றிவேல் முருகனுக்கு 38வது ஆண்டு ஆராட்டு விழா கடந்த 20ம் தேதி தொடங்கியது. முதல் நாள் மாலையில் வெற்றிவேலனுக்கு அலங்காரமும் தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றி திருவிளக்கு பூஜையும், அன்னதானமும் நடந்தது.
நேற்று முன்தினம் மாலையில் வெற்றிவேலனுக்கு சிறப்பு பூஜையும், இரவு மெல்லிசை கச்சேரியும் நடந்தது. 3வது நாளான நேற்று தேரிவிளை குண்டல் முருகன் கோவிலில் இருந்து பல வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் முருகன் எழுந்தருள மேளதாளங்களுடன் ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலமானது பழத்தோட்டம், பரமார்த்தலிங்கபுரம் வழியாக மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு தேசிய கொடி கம்பம் அருகில் அமைந்துள்ள பகவதியம்மாள்புரம் வெற்றிவேல் தலத்தை வந்தடைந்தது. அதே போல் வளையாபதி ஸ்ரீ சுயம்பு வீட்டில் இருந்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, மலர் அலங்காரத்துடன் மேள தாளத்துடன் ஊஞ்சல் எடுத்து வரப்பட்டது. நாஞ்சில் நாடு புத்தனார் ஆற்றில் முருகபெருமானுக்கு ஆராட்டு நடந்தது. ஆராட்டு நிகழ்வின் போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலர் தூவி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா... பக்தி கோஷத்துடன் வழிபட்டனர். பின்னர் பால், பன்னீர், குங்குமம், சந்தனம், களபம், தேன், இளநீர், தயிர், பஞ்சாமிர்தம், விபூதி முதலியவற்றால் முருக பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது.