பதிவு செய்த நாள்
23
நவ
2023
10:11
மேட்டுப்பாளையம்; குருந்தமலை குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில், புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரை இழுத்துச் சென்றனர்.
காரமடை அருகே குருந்தமலையில், மிகவும் பிரசித்தி பெற்ற, பழமையான குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள, பெரிய தேர், தேரோட்டத்திற்கு உபயோகப்படுத்த முடியாது என, ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து உபயதாரர்கள் உதவியுடன், இலுப்பை, தேக்கு ஆகிய இரண்டு வகை மரங்களால், தேர் செய்து முடிக்கப்பட்டது. இதில் மூன்று நிலை தேரில், கோவில் தல வரலாறு, சிவபுராணம், கந்தபுராணம், விஷ்ணு புராணம் ஆகியவை குறித்து, 148 சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன.
புதிய தேர் வெள்ளோட்டம் ; இன்று காலை தேரை பூக்களால் அலங்காரம் செய்தனர். தேரின் மீது கும்பம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்பு, கிட்டம்பாளையம், புங்கம்பாளையம், தேக்கம்பட்டி, செல்லப்பனூர், அரசப்பனூர் ஆகிய ஐந்து கிராமங்களைச் சேர்ந்த, மிராசுதாரர்கள், தேர் உபயதாரர்கள் ஆகியோருக்கு மரியாதை செய்யப்பட்டது. அப்போது மழை பெய்து கொண்டே இருந்தது. மழையை பொருட்படுத்தாமல், பக்தர்கள் சங்கிலியை பிடித்து மலையை சுற்றி, தேரை இழுத்துச் சென்றனர். இந்த தேரோட்ட வைபவத்தில், சிரவை ஆதீனம் குமர குருபர சுவாமிகள், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ், ஹிந்து சமய அறநிலைத்துறை இணை கமிஷனர் ரமேஷ், செயல் அலுவலர் லோகநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னராஜ், மாவட்ட அறங்காவலர் நியமனக்குழு உறுப்பினர் கவிதா கல்யாண சுந்தரம் உள்பட ஏராளமான பக்தர்கள் தேரை இழுத்துச் சென்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்துடன் இணைந்து, தேர் கண்காணிப்பு குழுவைச் சேர்ந்த சுப்பையன், ராஜேந்திரன், செல்வக்குமார், ராஜப்பன், கோவிந்தராஜ் மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.