கஞ்சாநகரம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24நவ 2023 10:11
மயிலாடுதுறை; கஞ்சாநகரம் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கஞ்சாநகரம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான லட்சுமி நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. நூற்றாண்டுகள் பழமையான இக்கோவிலில் ஆஞ்சநேயப் பெருமாள் தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் பெருமாளையும், ஆஞ்சநேயரையும் வழிபடுபவருக்கு சகல ஐஸ்வர்யங்கள் கிடைப்பதுடன், சத்ரு பயம் நீங்கி, தடைகள் அனைத்தும் அகலும் என்பது ஐதீகம் இத்தகைய சிறப்பு பெற்ற கோவிலின் திருப்பணிகள் முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 22 ம் தேதி வாஸ்து பூஜை செய்யப்பட்டு, 23ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இன்று மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூரணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு 9:30 மணிக்கு விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. 10 மணிக்கு லட்சுமி நாராயண பெருமாள் மற்றும் ஆஞ்சநேயபெருமானுக்கு அபிஷேக ஆராதனை செய்து வைக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை கோவில் அர்ச்சகர் சம்பந்த குருக்கள் மற்றும் சர்வ சாதகம் மருதூர் ராஜகோபால பட்டர் ஆகியோர் செய்து இருந்தனர். கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு பெருமாளையும் ஆஞ்சநேய பகானையும் சேவித்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செம்பனார்கோவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.