திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கு இன்று பட்டாபிஷேகம்; நாளை மலை மேல் மஹா தீபம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2023 09:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் இன்று (நவ. 25) கார்த்திகை திருவிழா பட்டாபிஷேகம் நடக்கிறது.
மலை மேல் மஹா தீபம் ஏற்றுதல் நாளை(நவ. 26) மாலை 6:00 மணிக்கு நடக்கிறது. அதற்கு முன் நிகழ்ச்சியாக இன்று இரவு 7:00 மணிக்கு கோயில் ஆறுகால்பீடத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.
ஆண்டுக்கு ஒரு முறை காமதேனு வாகனம்: கோயில் திருவிழா காலங்களில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை தினம் ஒரு வாகனத்தில் ரத வீதிகளில் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும். கார்த்திகை திருவிழா ஏழாம் நாள் அன்று ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் காமதேனு வாகனத்தில் சுவாமி புறப்பாடு நேற்று நடந்தது.
பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்: நாளை கோயிலில் பக்தர்களுக்கு சென்று திரும்ப ஒரு வழி பாதை அமைக்கப்பட்டுள்ளது. கோயில் முன் வாசல் வழியாக கோயிலுக்குள் செல்லும் பக்தர்கள் சுவாமி தரிசனம் முடித்து மடப்பள்ளி வாசல் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயிலுக்குள் பல இடங்களில் மின்விசிறிகள், குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. காலை 4:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு இரவு 9:00 மணி வரை நடை திறந்திருக்கும். மதியம் நடை சாத்தப்படாது. பக்தர்களின் காலணிகள் பாதுகாக்க கூடுதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 2 முறை: 16 கால் மண்டபம் முன்பு நிலை நிறுத்தப்பட்டுள்ள சிறிய வைரத் தேர் தெப்பத் திருவிழா, கார்த்திகை திருவிழாக்களில் ரத வீதிகளில் வலம் வரும். நாளை காலையில் தேரோட்டம் நடக்கிறது. அதற்காக தேர் சுத்தம் செய்யப்பட்டு குடை துணிகளால் தேர் அலங்கரிக்கும் பணி நடக்கும்.
கண்காணிப்பு கேமராக்கள்: மலை உச்சியில் உள்ள தீப தூணுக்கு மூங்கில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. தவிர மலை அடிவாரத்தில் இருந்து மலைமேல் முக்கிய பகுதிகளில் கோயில் சார்பில் முதல்முறையாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.