சபரிமலையில் 2039 வரை படி பூஜைக்கு முன்பதிவு முடிந்தது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27நவ 2023 04:11
சபரிமலை: சபரிமலையில் படி பூஜை 2039 வரையிலும் உதயாஸ்தமனபூஜை 2030 வரையிலும் முன்பதிவு முடிந்துள்ளது.
சபரிமலையில் நடைபெறும் பூஜைகளில் மிகவும் பக்தி பூர்வமானதும் அதிக செலவும் உடையதுமானது படி பூஜை. 18 படிகளிலும் பட்டு விரித்து தேங்காய் குத்துவிளக்கு வைத்து மலர்களால் அலங்கரித்து தந்திரி தலைமையில் சுமார் ஒரு மணி நேரம் இந்த பூஜை நடைபெறும். சபரிமலை உள்ளடக்கிய 18 மலைகளின் மலை தேவதைகளை திருப்திப்படுத்துவதற்காக இந்த பூஜை நடத்தப்படுகிறது. இந்த பூஜைக்கு கட்டணம் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 900 ரூபாய். 2039 வரை முன்பதிவு முடிந்துள்ளது.
நடைதிறந்தது காலை முதல் மாலை வரை தொடர்ச்சியாக நடைபெறும் உதயாஸ்தமன பூஜையின் கட்டணம் 61,800. இது 2029 வரை முன்பதிவு முடிந்துள்ளது. மற்றொரு முக்கிய பூஜையான சகஸ்ர கலச பூஜையின் கட்டணம் 91 ஆயிரத்து 250 ரூபாய். இது 2030 வரை முன்பதிவு முடிந்துள்ளது. சபரிமலை சன்னிதானத்தின் நிர்வாக அலுவலகத்தில் இதற்கான பணம் செலுத்தி பூஜைகள் முன் பதிவு செய்யலாம். தற்போது முன்பதிவு செய்பவர்கள் பூஜையில் செய்யும் காலத்தில் கட்டணம் அதிகரிக்கப்பட்டிருந்தால் கூடுதல் தொகையை மீண்டும் செலுத்த வேண்டும். படிபூஜை நேரத்தில் பக்தர்கள் படி ஏறுவதை தடை செய்ய வேண்டும் என்பதால் மண்டல காலத்தில் இந்த பூஜை கிடையாது. மகர விளக்கு முடிந்த பின்னரும், மாத பூஜை காலங்களிலும் படி பூஜை நடைபெறும்.