பதிவு செய்த நாள்
10
டிச
2023
03:12
சென்னை: குழு அமைத்து சிதம்பரம் நடராஜர் கோவிலை, மத்திய தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், புராதன பாதுகாப்பு அமைப்புகூறியுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில், மாநில அளவிலான நிபுணர் குழு ஒப்புதல் பெறாமல், கோபுரங்களை சுற்றி பூங்கா அமைப்பது உள்ளிட்ட கட்டுமான திட்டங்களை மேற்கொள்ள, பொது தீட்சிதர் குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஹிந்து அறநிலையத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது, இந்த வழக்கில் எதிர்மனுதாரரான துாத்துக்குடியை சேர்ந்த, புராதன பாதுகாப்பு அமைப்பின் செயலர் ஸ்ரீகுமார் தாக்கல் செய்த பதில் மனு:
அனுமதி இன்றி பூங்கா அமைக்கப்படுகிறது என வழக்கு தொடர்ந்து, அதன் வாயிலாக சிதம்பரம் கோவில் நிர்வாகத்திலும், புராதன கமிட்டியிலும் மறைமுகமாக தலையிட அறநிலையத்துறை முற்படுகிறது. மத்திய தொல்லியல் துறை, ஒரு குழுவை அமைத்து, கோவிலை ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும். தற்போது, கோவிலுக்கு எதிராக கூறப்பட்ட புகார்கள் பொருத்தமற்றவை. கோவிலை அழகுப்படுத்தும் விதமாக, உள்ளே புல் தரை அமைக்கப்படுவதாக, தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலிலும், திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் உள்ளேயும், ஹிந்து சமய அறநிலையத்துறை, இதுபோன்ற பணிகளை மேற்கொண்டுள்ளது. கோவில் நிர்வாகத்தில் இருந்து நீக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார்.அவருக்கு புல்தரைக்கும், பூங்காவுக்கு உள்ள வித்தியாசம் தெரியவில்லை. தகவல் அறியும் சட்டத்தில் கோரப்பட்ட விபரங்களுக்கு, கோவில் தணிக்கை அறிக்கையை, கோவில் சொத்து விபரங்களைதர அறநிலையத்துறை மறுக்கிறது.
புராதன சின்னங்கள்மீது அறநிலையத்துறைக்கு அக்கறை இருந்தால், 100 பழமையான கோவில்களை புராதன சின்னங்களாக அறிவித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், உள்நோக்கத்துடன் இந்த வழக்கை அறநிலையத்துறை தாக்கல் செய்துள்ளது. தீட்சிதர்கள் குழு பணிகள் தொடரஅனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து வழக்கை இரண்டு வாரத்துக்கு தள்ளிவைத்து, அமர்வு உத்தரவிட்டது.