பதிவு செய்த நாள்
10
டிச
2023
03:12
திருச்சி : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், மேற்கு கோபுர வாசல் வழியாக, டிப்பர் லாரியை ஓட்டிச்செல்ல முயன்ற சம்பவம், பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட பழமையான கோவில். ராஜகோபுரம் உட்பட வெள்ளை கோபுரம், வடக்கு மற்றும் மேற்கு கோபுர வாயில்களுடன் அமைந்த ரெங்கநாதர் கோவிலில், தாயார் சன்னதி உட்பட பல்வேறு சன்னதிகளுக்கும் தனித்தனி கோபுரங்கள் உள்ளன.
இவை தவிர, சித்திர வீதிகள் மற்றும் உத்திர வீதிகளில், நுழைவு வாயில் கோபுரங்களும் உள்ளன. இந்த கோபுரங்கள் அனைத்திலும், சுதை சிற்பங்களும், கல்துாண்களில் புடைப்பு சிற்பங்களும் உள்ளன. பழமையான இந்த கோவிலுக்கு, யுனெஸ்கோ சார்பில், புராதன அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடைபெற்று வருகிறது. வரும், 23ம் தேதி சொர்க்க வாசல் திறப்புக்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த, 8ம் தேதி, கோவிலின் மேற்கு கோபுர வாசல் வழியாக, டிப்பர் லாரியை ஓட்டிச் செல்ல முயன்றனர். லாரியின் அகலம் அதிகமாக இருந்ததால், அந்த வாசல் வழியாக செல்ல முடியவில்லை. இதனால், லாரியை பின்னோக்கி எடுத்து சென்று விட்டனர். ஆனால், டிப்பர் லாரி சிக்கிக் கொண்டதால், மேற்கு கோபுர வாசலில் இருந்த சிற்பங்கள் சேதமடைந்து விட்டதாக தகவல் பரவியது. ஸ்ரீரங்கம் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து விசாரித்த போது, மேற்கு கோபுர வாசலில் செல்ல முயன்ற லாரி உரசியதால், சிற்பம் எதுவும் சேதமடையவில்லை என்று கோவிலில் விழா ஏற்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும்; ஸ்ரீரங்கம் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தரப்பில் கூறியதாவது: ஸ்ரீரங்கத்தில் ராஜகோபுரம் உட்பட பல நுழைவு வாயில்கள் வழியாக, டூ - வீலர் போன்ற இலகு ரக வாகனங்கள் சென்று வருகின்றன. அந்த வழியாக, சில நேரங்களில் லாரி போன்ற கனரக வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர். மேற்கு கோபுரம் வழியாக டிப்பர் லாரி செல்ல முயன்ற போது, சேதம் ஏற்படவில்லை; எனினும், முறையான பயிற்சி இல்லாத டிரைவர்கள் ஓட்டும் போது, கோபுரங்களில் சேதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. தற்போது, அய்யப்பன் கோவில் சீசன் என்பதாலும், வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுவதால், பக்தர்கள் அதிகம் வந்து செல்கின்றனர். எனவே, உத்தரவீதிகள், சித்திர வீதிகளில் கண்டிப்பாக கனரக வாகனங்களை அனுமதிக்கக் கூடாது. சில மாதங்களுக்கு முன், கிழக்கு கோபுர வாசல் பகுதியில் உள்ள கோபுரத்தில், சுதை சிற்பம் மற்றும் கொடுங்கைகள் இடிந்து விழுந்தன. யுனெஸ்கோ சான்று பெற்ற, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும்.தற்போது, நம்மால் இது போன்ற கோபுரங்களை கட்ட முடியாது. எனவே, பண்பாடு, கலாசாரத்தின் அடையாளங்களாக திகழும் பழமையான கோவில் கோபுரங்களை பாதுகாக்க வேண்டியது கோவில் நிர்வாகம் மற்றும் அரசின் கடமை.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.