குத்தாலத்தில் கடை ஞாயிறு தீர்த்தவாரி; புனித நீராடி பக்தர்கள்.. தருமபுரம் ஆதீனம் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2023 08:12
மயிலாடுதுறை; குத்தாலத்தில் நடைபெற்ற கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரியில் தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் காவிரியில் புனித நீராடினார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் கார்த்திகை கடை ஞாயிறு தீத்துவாரி உற்சவம் நடைபெற்றது. வித்துன்மாலி என்ற அரக்கன் சிவபெருமான் அருளால் சூரியனைப் போல ஒளி படைத்த கிரகமாக மாறினான். இதனால் சூரியனால் பூமிக்கு ஒளி வழங்க முடியாமல் போனது. இதனை அடுத்து சூரிய பகவான் தான் இழந்த சக்தியையும், சிவபெருமான் அருளையும் பெற குத்தாலத்தில் உள்ள காவிரியில் புனித நீராடி தவம் இருந்து அரக்கனிடமிருந்து துன்பம் நீங்க பெற்ற நாள் கார்த்திகை மாத கடைசி ஞாயிறு என்பது ஐதீகம். இதனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத கடை ஞாயிறு அன்று சிவ, வைணவ ஸ்தலங்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் காவிரி கரையில் எழுந்தருள தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு கார்த்திகை மாத கடை ஞாயிறான நேற்று அரும்பவ வன முல்லை நாயகி சமேத உக்தவேதிஸ்வரர், ஆனந்தவல்லி சமேத ஓம் காளீஸ்வரர், சௌந்தரநாயகி சமேத சோழீஸ்வரர், ஆதிசக்தி சமேத மன்மதீஸ்வரர், செங்கமலத்தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள் ஆகியோர் கோவில்களில் இருந்து பஞ்சமூர்த்திகளுடன் மங்கள வாத்தியம் இசைக்க வெள்ளி ரிஷப, மயில், மூஷிக, கருட வாகனங்களில் காவிரி கரையில் எழுந்தருளினர். அங்கு அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரியில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.