பதிவு செய்த நாள்
14
டிச
2023
07:12
மேட்டுப்பாளையம்; வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு, காரமடை அரங்கநாதர் கோவிலில், பகல் பத்து உற்சவம் துவங்கியது.
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில் ஆகும். இங்கு வைகுண்ட ஏகாதசி விழா, விமர்சையாக நடைபெறும். விழாவை முன்னிட்டு, பகல் பத்து மற்றும் ராப்பத்து உற்சவம் நடைபெறும். நேற்று கோவிலில், திருமொழித் திருநாளான, பகல் பத்து உற்சவம் தொடங்கியது.
கோவில் நடை திறந்து, அதிகாலையில் மூலவர் அரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், கால சந்தி பூஜை செய்யப்பட்டது. இதை அடுத்து உற்சவர் அரங்கநாத பெருமாள், வெண்பட்டு உடுத்தி, வெள்ளி சிம்மாசனத்தில் கோவில் வளாகத்தில் வலம் வந்து, ரங்க மண்டபத்தில் எழுந்தருளினார். சுவாமியின் முன்பாக, நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், இராமானுஜர் ஆகிய மூன்று ஆழ்வார்கள் எழுந்தருளினர். அதைத் தொடர்ந்து, அரங்கநாத பெருமாள் சுவாமியிடம் இடமிருந்து, மாலை, பரிவட்டம், சடாரி மரியாதை, 3 ஆழ்வார்களுக்கும் செய்யப்பட்டது. அதன் பின்பு கோவில் ஸ்தலத்தார் வேதவியாச பட்டர், திருமலை நல்லா சக்கரவர்த்தி ஆகியோர் திருநெடுந்தாண்டகம், திருப்பல்லாண்டு, பெருமாள் திருமொழி, பெரிய திருமொழி ஆகியவற்றிலிருந்து பாசுரங்கள் சேவித்தனர். பூஜை செய்த பின், பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அரங்கநாத பெருமாளை வழிபட்டனர். வருகிற, 22ம் தேதி இரவு அரங்கநாத பெருமாள், மோகன அவதாரத்தில் எழுந்தருள உள்ளார். 23ம் தேதி அதிகாலை வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நடைபெற உள்ளது. அன்று இரவு, 11:00 மணிக்கு திருவாய்மொழி திருநாள் எனும், ராபத்து உற்சவம் துவங்குகிறது. 30ம் தேதி இரவு குதிரை வாகனத்தில் சுவாமி உற்சவமும், ஜன., 1ம் தேதி திருவாய்மொழி திருநாள், சாற்று முறையும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.