ராமர் சீதையைத் திருமணம் செய்து கொண்டு மிதிலையில் இருந்து அயோத்திக்குப் போகும் வழியில் பரசுராமர் அவரை சண்டைக்கு இழுக்கிறார். தம்முடைய தவவலிமை முழுவதையும் ராமபாணத்திற்கு இரையாக்கிவிட்டு, தாம் பிராமணர் என்ற நிலையில், நீ எண்ணிய பொருள் எல்லாம் இனிது முற்றுக என்று ராமருக்கு ஆசிர்வாதம் செய்கிறார் பரசுராமர். இலங்கையின் அசோகவனத்தில் சீதை சிறை இருந்த சமயம் இதை நினைவுபடுத்தி ராவணனுக்கு புத்திமதி கூறுகிறாள். தூர்த்தனே! கார்த்த வீரியார்ச்சுனனுக்கு ஆயிரம் கைகள் இருந்தன. அவன் உனது இருபது தோள்களையும் பிடித்து உலுக்கி சண்டையிட்டு வென்றான். அப்பேற்பட்ட கார்த்தவீரியனைப் பரசுராமர் கொன்றார். அதே பரசுராமர் என் பர்த்தவிடம் தோற்றுப் போனார். ஆகையினாலே மகாவீரராகிய எனது கணவருடைய வீரம், புகழ், பெருமை இவைகளை நீ அறியாமல் என்னிடம் வம்பு செய்யாதே. மீறி நீ செய்தால் அழிந்து விடுவாய்! ஜாக்கிரதை என்கிறாள் சீதாப்பிராட்டி.