பதிவு செய்த நாள்
30
டிச
2023
11:12
சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே, வீரவநல்லுார் என்ற பழமையான கிராமம் உள் ளது. இங்கு, சிவபாண்டி ஆண்டார் கல்மடம் என்ற ஆன்மிக மடம், பிற்கால பாண்டியர் காலத்தில் இருந்து தற்போது வரை செயல்படுவது கல்வெட்டு வாயிலாக தெரியவந்துஉள்ளது.
இதுகுறித்து, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன பேராசிரியர் தாமரைபாண்டியன் கூறியதாவது: சில மாதங்களுக்கு முன், தவசிமுத்துமாறன் என்பவர், எனக்கு இரண்டு கல்வெட்டு படங்களை அனுப்பி, தகவல் கேட்டிருந்தார்.
தானம்; அவற்றில் உள்ள எழுத்துக்களை சரியாக படிக்க முடியாததால், பால்பேக்கர், பாலசுப்பிரமணியன் ஆகியோருடன், நேரில் சென்று பார்த்தபோது, கல்வெட்டுகள் செப்பு பட்டய வடிவில் இருந்தன. அதன்படி, பிற்கால பாண்டிய மன்னன், 1641ல் இந்த ஆன்மிகத்துக்கான கல்மடத்தை கட்டியுள்ளான். இந்த ஊர், அப்போது, வீர கேரளநல்லுார் என்ற பெயரில் இருந்துள்ளது. இதை பராமரிக்கவும், கல்வி, ஆன்மிக பணிகளுக்காகவும் அகத்து வைக்குடிப்பற்று, வாகையடிப்பகுதி, வடக்குப் பற்று, அரசடிப்பள்ளம், பத்தலடி உள்ளிட்ட இடங்களில், நிலங்களை தானமாக அளித்துள்ளான். அதன்பின், 1678ல், இந்த மடத்தைப் பராமரிக்க, சாணார் குலத்தைச் சேர்ந்த ராமனாச்சியார் என்பவர், சில ஊர்களில் உள்ள நிலங்களை தானமாக அளித்துள்ளார். அதிலிருந்து விளைச்சலாக வரும் நெல்லையும், வரியாக வரும் பணத்தையும் வைத்து, பராமரிப்பு மற்றும் பூஜைகளை செய்யும்படி, கல்வெட்டின் வாயிலாக தெரிவித்துள்ளார். மேலும், மடத்திற்கான கடனையும் அடைத்ததாக கல்வெட்டு செய்தி கூறுகிறது.
தகவல்; அதேபோல, 1678ல், கணக்கன் பராக்கிரம பாண்டியப்பெருமாள் என்பவரும் நிலங்களை தானமாக வழங்கியுள்ளார். இந்த வருவாயில் இருந்து கல்விப்பணிகள், பிள்ளை யார் பூஜை, மகேஸ்வர பூஜை உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளன. மேலும், வெள்ளிமலை வேலாயுதப் பெருமாள் கோவிலுக்கும் பூஜைகள் செய்யப்பட்ட தகவல் உள்ளது. மேலும், பல அரிய தகவல்கள் அடங்கிய இந்த கல்வெட்டுடன் கூடிய மடம் சிதைந்து, அழிவுறும் நிலையில் உள்ளது. என்றாலும், தற்போதும் கல்வி மற்றும் ஆன்மிகப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த மண்டபத்தை சீரமைத்தால், வரலாற்றுக்கு துணையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.