தொடர் விடுமுறை; திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30டிச 2023 03:12
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் தொடர் விடுமுறையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
புதுச்சேரி மாநில காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக சனீஸ்வர பகவான் அருள்பலித்து வருகிறார். உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினமும் சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இக்கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா கடந்த 20ம் தேதி சிறப்பாக நடைபெற்றது. சனிப்பெயர்ச்சி முடிந்து இரண்டாது சனிக்கிழமை மற்றும் தொடர் விடுமுறை என்பதால் அதிகாலை முதல் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை 4மணிக்கே நடை திறக்கப்பட்டு தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
முன்னதாக பக்தர்கள் நளன் தீர்த்தத்தில் புனித நீராடி பின்னர் கலிதீர்த்த விநாயகரை தரிசனம் செய்தனர். மேலும் கோயிலில் எள் தீபம் ஏற்றி பரிகார பூஜை செய்தனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் தலைமையில் பிஸ்கட், தண்ணீர், அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் தெற்குவீதி, வடக்கு வீதி,தேரடி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் நீண்ட வரிசையில், சுமார் மூன்று மணிநேரம் காத்திருந்து சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர்.