பதிவு செய்த நாள்
31
டிச
2023
04:12
சென்னை: கோவில்களுக்கு பக்தர்கள், கியூ.ஆர்., குறியீடு வழியே நன்கொடை செலுத்தும் வசதியை, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.
சென்னையில் உள்ள அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், சுவாமி படங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள, 2024ம் ஆண்டுக்கான காலண்டரை, அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். கோவில்களுக்கு பக்தர்கள், கியூ.ஆர்., குறியீடு வழியே நன்கொடை செலுத்தும் வசதி; இணைய தளம் வழியாக, 7,233 கோவில்களுக்கு நன்கொடை செலுத்தும் வசதியையும், அவர் துவக்கி வைத்தார்.
அதன்பின் அவர் அளித்த பேட்டி: இணையதளம் வழியே கோவில்களுக்கு நன்கொடை செலுத்தும் வசதி, 2021ம் ஆண்டு 47 முதுநிலை கோவில்களில் அறிமுகமானது. இரண்டு ஆண்டுகளில், 5.61 கோடி ரூபாய் நன்கொடை பெறப்பட்டுள்ளது. இத்திட்டம் பக்தர்களிடம் வரவேற்பை பெற்றதால், 7,233 கோவில்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டு உள்ளது. நன்கொடை வழங்கியதற்கான ஒப்புகை, மின்னணு ரசீது, வருமான வரி சலுகை சான்றிதழ் ஆகியவை, எஸ்.எம்.எஸ்., வழியே, நன்கொடையாளருக்கு அனுப்பி வைக்கப்படும். அதை பயன்படுத்தி, ரசீது மற்றும் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். சுவாமி படங்களுடன் கூடிய காலண்டர் 100 ரூபாய்க்கு விற்கப்படும். பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாணவர்களை தொன்மையான கோவில்களுக்கு சுற்றுலா அழைத்து செல்லும் கோரிக்கை வரவேற்கத்தக்கது. அனைத்து மதத்தினரும் படித்து வருவதால், அதற்கான சூழ்நிலையை பொறுத்து, இதை செயல்படுத்து வோம்.
சிறப்பு வழிபாடு: ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று சிறப்பு வழிபாடு நடக்கும் கோவில்களில், இந்த ஆண்டு வழக்கம்போல் நடக்கும். சில கோவில்களில், நள்ளிரவு 12:00 மணிக்கும், சில கோவில்களில் அதிகாலையும் நடை திறக்கப்பட்டு வழிபாடு நடக்கும். இதில் மாற்றம் செய்யும்படி, அலுவலர்கள் எவ்வித அழுத்தமும் தர மாட்டார்கள். வழக்கமான நடைமுறையை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சேகர்பாபு கூறினார்.