பதிவு செய்த நாள்
24
அக்
2012
10:10
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில், சரஸ்வதி பூஜையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இன்று அம்பு சேர்வையுடன் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், காலை 6.00 மணிக்கு அபிஷேக பூஜை நடந்தது. தங்க கவசத்தில், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அம்மன் அருள்பாலித்தார். இரவு 7.00 மணிக்கு நவராத்திரி நாயகி என்ற தலைப்பில் கோவையை சேர்ந்த பேராசிரியை புனிதாவின் பக்தி சொற்பொழிவு நடந்தது. தொடர்ந்து, இன்று மைசூர் மேல்கோட்டையை சேர்ந்த இசை கலைஞர்களின் நாதஸ்வர இசை நிகழ்ச்சியும், தவில் இசை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8.00 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடக்கிறது. சவுடாம்பிகை அம்மன் கோவிலில், நேற்று சரஸ்வதி அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலை 9.00 மணிக்கு மாவிளக்கு பூஜையும், மாலை 6.00 மணிக்கு அம்பு சேர்வையுடன் அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது. இதில், பயாஸ்கோப் வீதி, வெங்கட்ராமபுரம் வீதி, பல்லடம் ரோடு வழியாக அம்பு போட்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.நாளை (25ம் தேதி) மாலை 4.30 மணிக்கு தேவாங்கபுரத்தில் இருந்து அலகு சேவையுடன் தீர்த்தம் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு தேவாங்க சமூகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி பரிசும், உபகரணமும் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 26ம் தேதி காலை 6.00 மணிக்கு மகா அபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது.நெகமம் ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவிலில், நவராத்திரியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று கத்தி போட்டு கொண்டு பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி, இன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் இன்றும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.