திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே ந.வயிரவன்பட்டியில் வளரொளிநாதர் வயிரவசுவாமி கோயிலில் உலக நன்மை வேண்டி 64 பைரவ மகாயாகம் நிறைவு பெற்றது.
இக்கோயிலில் எழுந்தருளியுள்ள மார்த்தாண்ட வயிரவசுவாமிக்கு மார்கழி தேய்பிறை அஷ்டமியன்று இறைவன் சகல ஜீவராசிகளுக்கும் படியளக்கவும், உலக நன்மை வேண்டியும், 64 பைரவர் மகாயாகத்தை ஜன. 2ல் பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் துவக்கி வைத்தார். தொடர்ந்து மூன்று நாட்கள் நடந்த மகாயாகத்தில் வயிரவன்பட்டி கோயில் குருக்கள் சிவக்குமார் தலைமையில் 100 சிவாச்சார்யர்கள் யாகசாலை பூஜைகளில் பங்கேற்றனர். இன்று காலை 6:00 மணிக்கு 4ம் காலயாக பூஜை துவங்கி, கோ பூஜை, வடுக பூஜை, கன்யா பூஜையும், சுமங்கலி பூஜை, கஜ பூஜை, அஸ்வமேத பூஜை நடந்து பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. பின்னர் யாகசாலையிலிருந்து 65 கலசங்களும் புறப்பாடாகி தேரோடும் வீதியில் கோயிலை வலம் வந்து மூலவர் சன்னதி சென்று மூலவருக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. பின்னர் உற்ஸவ பைரவருக்கும் தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.